நிறையப் படியுங்கள் என்ற வலுவான குரல்களுக்கு மத்தியில் படிப்பதை நிறுத்துங்கள் என்ற ரீதியில் ஆரம்பிக்கிறார் வினோபா. கவனக் குறைவால் எளிதில் திரித்துப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ள கருத்துக்கள். சிறிய செறிவான நூல்.

தன்னறம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள இப்புத்தகம் தற்கால பொதுப்புத்தியின் சிந்தனைகளுக்கு எதிர்கோணத்தில் வினோபா முன்வைக்கும் ஆதாரக் கல்வி குறித்த செறிவான கட்டுரைகள் அடங்கியது.

ஒரு புத்தகத்தை முடித்தவுடன் வீட்டில் அனைவரையும் அதைப் படிக்கச் சொல்லி இன்புறுவது என் வழக்கம். (“எங்களுக்கு அது பெருந்துன்பம்” என்று குரல் கேட்டால் அதைப் புறக்கணித்து மேலே செல்லுங்கள், என் வீட்டாராகத்தான் இருக்கும்). ஆனாலும், ஒரு புத்தகத்தை மட்டும் யாரும் படித்துவிடாதவாறு பதுக்கி வைத்துள்ளேன் என்றால் அது இந்தப் புத்தகம்தான்.

காரணம் வினோபா சொல்லியிருக்கும் பின்வரும் கருத்துதான்.

புத்தகங்களையும் நோயுற்ற உள்ளத்தின் அடையாளமாகக் கருதவேண்டும்

புத்தகங்களுக்கு எதிராக ஒருவர் குரல்கொடுத்தால், அதுவும் காந்தியின் முதன்மைச் சீடரே சொல்லிவிட்டார் என்றால் போதும். வீட்டில் நெருக்கடி நிலமைதான். எதிர்வாதங்களுடன் போருக்குத் தயாராகும் வரை இதை மறைத்து வைப்பது உகந்தது. ஆனாலும் விரைவில் அனைவரையும் வாசிக்கப் பரிந்துரைப்பது உறுதி.

மேலும், அறைகுறையாகப் புரிந்துகொண்டு முன்முடிவுகளுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ள கருத்துகள். எனவே கவனமாக உள்வாங்கிக்கொண்டு முழுத் தரவையும் விவாதித்து வளர்த்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

புத்தக அறிவு

இதுவரை விற்றுத்தீர்ந்திருக்கும் சுய முன்னேற்ற நூல்களால் யாராவது முன்னேறியுள்ளார்கள் என்றால் அதிகப்படியானோர் அப்புத்தகங்களின் ஆசிரியர்களாகவே இருக்க முடியும். அதையும் மீறி சிலர் சாதித்தார்கள் என்றால் அவர்கள் செயல்வீரர்களே.

அவர்கள் செயல்வீரர்கள் என்பதே வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருக்கும். வினோபா வலியுறுத்துவதும் அதுவே. வாசித்ததை நடைமுறையில் செயல்படுத்தாவிட்டால், வாசிக்காமலேயே இருந்திருக்கலாமே என்பதே அவரது கேள்வி.

கறியும் சோறும் பற்றிப் பேசுவதால் யாருடைய வயிறாவது நிறைவதுண்டா?

மறுக்கமுடியாத உண்மை.

ஆனால் படிக்கக்கூடாது என்பதல்ல வினோபாவின் வாதம். படித்தவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்பதே. செயலுக்குத் தேவையானவற்றைப் படிக்க வேண்டும் என்பதும் கூட.

இதுபோன்ற கருத்துக்களெல்லாம் வள்ளுவரிலிருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும் என்பதே “தமிழ்கூறும் நல்லுலகத்தின்” துணிபு அல்லவா? இதை வள்ளுவரும் அவ்வப்போது மெய்ப்படுத்தத் தவறுவதில்லை.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

கண்ணின் ஆகச் சிறந்த பயன் கற்பதற்கு உதவுவதே. பார்வையின் மற்ற பலன்கள் கல்வியின் முன்பு முக்கியமாகப் படவில்லை. ஆகவேதான் கல்லாதோர் கண்களே இல்லாதோர் என்றார் வள்ளுவர்.

சரி, எழுதவும் படிக்கவும் கற்றுவிட்டால் போதுமா என்ற கேள்விக்கு அடுத்த அவதானிப்பு

எழுதவும் படிக்கவும் கற்றிருந்தும் வாசிக்காதவன் எழுத்தறிவில்லாதவனே.

குறள் அளவிலேயே இருந்தாலும் இது வெண்பா அல்ல. இதனைக் குறள் வெண்பாவின் இலக்கணத்தில் எழுத முடிந்தால் எனக்கு அனுப்பவும். மேற்கண்ட கூற்றை மார்க் ட்வெயின் சொல்லியிருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். இதை அவர் சொல்லாமல் இருந்திருக்கவும் சம வாய்ப்புள்ளது.

இதில் கற்றபின் தொடர வேண்டிய வாசிப்பின் முக்கியத்துவம் மேலெழுகிறது. உண்மைதானே. வாசிப்பதே இல்லையென்றால், எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்வதன் அவசியமென்ன?

இதன் தொடர்ச்சியே வினோபாவின் கேள்வி.

வாசித்தது வாழ்க்கைக்குச் செயல்பாடுகளுக்கு உதவவில்லை

என்றால் அதனாலென்ன பயன்?

எத்தனை அறிவுரைகள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ முதல் ‘சீனாப்போ மச்சி வீணாப்போகாதே’ வரை வாசித்து உதறிச் செல்பவர்களையே காணமுடியும். இதைப் படித்ததிலிருந்து நான் இச்செயலை விட்டொழித்தேன் என்றோ, இதனைச் செய்ய ஆரம்பித்தேன் என்றோ கூறுபவர்கள் மிக அரிது.

ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதிமோட்சம் படித்துவிட்டு காந்தி “டால்ஸ்டாய் பண்ணை” அமைத்து குடியேறினார். “சத்திய சோதனை” படித்தவர்களை ‘காந்தியின் வாழ்க்கையிலிருந்து செயலாக நீங்கள் முன்னெடுத்திருப்பது என்ன?’ என்று கேட்டுப்பாருங்கள். பலரும் வாழ்க்கையில் சிறு மாற்றத்தைக்கூடச் செய்திருக்க மாட்டார்கள் (நான் உட்பட).

இதனால்தான் வினோபா செயலாக உருவெடுத்துப் பயனளிக்காத புத்தக அறிவைச் சாடுகிறார்.

மனப்பாடம்

பணியிடத்தில் மேலாளர் ஒருவர் பல வருடங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் வாழ்ந்துவிட்டு இந்தியா திரும்பிய கதையைச் சொன்னார். அவரது மகள்கள் இருவரும் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் வாய்ப்பாடு மனப்பாடம் செய்யச் சொல்வதைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியிருக்கின்றனர். வேறு வழியில்லாமல் இங்கிலாந்தில் குடியேறி இருவரும் பள்ளி முடித்து மருத்துவம் பயின்றுகொண்டிருந்தனர்.

அப்போது மனப்பாடம் செய்யச் சொல்வதைக் குறித்த உரையாடலில் எனக்கும் நண்பர்களுக்கும் அவருக்கும் கருத்து மோதல்களே இல்லை. அத்தனைபேரும் மனப்பாடம் செய்யச் சொல்வதைச எதிர்த்தே பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. வினோபா இருந்திருந்தால் நாணயத்தின் மறுபக்கத்தை உரைத்திருப்பார்.

மனப்பாடம் செய்ய குறைவான முக்கியத்துவமே அளித்திருப்பது மேலை நாட்டுக் கல்வியின் குறைபாடு

மனப்பாடம் செய்வதை வினோபா இந்தியப் பின்புலத்தில் விளக்குகிறார். மேலைப் பண்பாட்டில் உலகைத் துண்டாக்கி பகுத்தறிவதற்கே முனைகிறார்கள். ஆனால் இந்தியப் பண்பாட்டில் உலகை முழுமையாகக் கண்டு ஒருங்கிணைத்து ஆராய்கிறோம். முன்னது புத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பின்னது புத்தியுடன் உணர்ச்சிகளுக்கும் மன எழுச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.

இதனாலேயே இலக்கியம் மனப்பாடம் செய்யப்பட்டு ஒவ்வொரு மனதிலும் சேமிக்கப்பட வேண்டும் என்று வினோபா கூறுகிறார். உணர்ச்சிகளுக்கும் மன எழுச்சிக்கும் இலக்கியத்திலிருந்து கிடைக்கும் அனுபவம் மிகப் பெரிய ஊற்று என உணர்ந்திருக்கும் எவரும் இதையொட்டிய வலுவான வாதங்களை முன்வைக்க முடியும்.

ஆசிரியர்கள்

கற்பிப்பது மட்டுமே தன்னால் இயலும் செயல்முறைகளும் நடைமுறைகளும் எனக்கு அணுக்கமானவை அல்ல என்ற மனநிலையில் ஒரு இளைஞன் வினோபாவிடம் சிக்குகிறான். ஒரு கணம் என்னை அந்த இடத்தில் பொருத்திப் பார்த்தேன். அணுக்கமாகத் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்த உரையாடல்.

கற்பிப்பது மட்டுமே என்பதன் பொருள் வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு சவம் என்பதாகும்.

வினோபாவின் கூரிய வார்த்தைகள் சிலசமயம் திடுக்கிட வைத்துவிடுகின்றன. நமது கல்வி முறைமீது வைக்கும் விமரிசனத்தைவிட மிகக் கூரிய மொழியில் ஆசிரியர்களை விமரிசிக்கிறார்.

ஆசிரியர்களுக்கு நீதிபதிகளைவிட அதிக அதிகாரம் இருக்க வேண்டும் எனக் கூறும் வினோபா, அதற்குத் தகுதியாக இருக்க ஆசிரியர்களிடமிருந்து உன்னதமான விழுமியங்களையும் எதிர்பார்க்கிறார்.

ஆசிரியர்கள் மீது அவர் கொண்டுள்ளு எதிர்பார்ப்பை நடைமுறைக்குச் சாத்தியப்படாது எனப் புறக்கணிக்க வாய்ப்பு உண்டு. ஆனாலும் மொத்த உள்ளடக்கத்திலும் மேலோங்கியுள்ள லட்சியவாதத்தை பின்நிறுத்திப் பார்க்கும்போது ஆசிரியர்களே அதன் உயர்வுக்கும் சரிவுக்கும் காரணமாக அமைவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கல்வியை முறைப்படுத்துதல்

மறுபடியும் மேலை நாட்டைக் கல்வி முறையைத் தூக்கிப் பிடித்து இந்தியப் பண்பாட்டைத் தூற்றுவதற்கு முன் சிந்திக்க வேண்டிய வினோபாவின் கூற்று:

உலகம் முழுதும் கல்வி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இது மிக ஆபத்தானது.

“மேலை நாடுகளில் கல்வியை அரசாங்கமே கட்டுப்படுத்துகிறது. நமது நாடுதான் கெட்டுக் குட்டிச்சுவராகிவிட்டது. அரசாங்கப்பள்ளிகள் சரிவர இயங்குவதில்லை. தனியார் பள்ளிகளை மூடிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.” இதுபோன்ற வாதங்கள் நம் அன்றாடத்தில் மலிவாகக் கிடைப்பதைப் பார்த்திருப்போம்.

கல்வி அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால், அரசு தனது போக்கையே பாடமாக வலியுறுத்தும். அதன் நூல்களையே அனைத்து மாணவர்களும் பயிலவேண்டும் என விதிமுறைகள் உண்டாகும். இதற்கு மாறாக, கல்வி அரசின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்ததே இந்து மதத்தில் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாத ஆறு தத்துவங்கள் தோன்றக் காரணம் என்ற வலுவான கூற்றையும் முன்வைக்கிறார். கூடவே, தற்போதிருப்பதற்கு நேர்மாறாக, முற்கால இந்தியப்பண்பாட்டில் அரசர்களுக்கு குருமார்கள் மீது எந்தச் செல்வாக்கும் இருந்ததில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறார்.

இதற்குப் பல உதாரணங்களை நிகழ்காலத்தில் பார்க்க முடியும். தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் பாடத்திட்டத்தில் அரசியல்வாதிகள் மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளின் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் திணிக்கப்படுவதை எதிர்த்துப் பல குரல்கள் எழுந்திருக்கின்றனவே. ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்துப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி கார்ல் மார்க்ஸ் பற்றிய உள்ளடக்கத்தை நீக்கியது ஒரு அரசு. மலாலாவுக்கு மறுக்கப்பட்ட கல்வி பரவலாக அறியப்பட்ட மற்றொரு உதாரணம்.

சரி, தனியாரிடம் கல்வி இருப்பது ஏதுவானதா? அதையும் வலுவாக மறுத்துவிடுகிறார். கல்விக்கு கட்டணம் என்பதற்கே இடமில்லை என்பதை இவ்வாறு வரிக்கிறார்:

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட ஊதியம் கேட்டால் உலகம் என்ன ஆகும்?

பின்பு யார்தான் கல்விமுறையைப் பாடத்திட்டத்தை முடிவுசெய்வது?

கல்வி ஆசிரியர்கள் கையில்தான் இருக்க வேண்டும். அதனால்தான் ஆசிரியர்களுக்கு நீதிபதிகளை விட அதிகச் சுதந்திரமும் அதிகாரமும் வேண்டும் என்கிறார். நாடுமுழுக்க ஒரே பாடத்திட்டம் என்னும் ஒற்றைப்படையான கல்விமுறையை அவர் எதிர்ப்பதும் இதனால்தான்.

தேர்வு

வெறும் 33 மதிப்பெண்கள் வாங்கி, 67 மதிப்பெண்களை இழந்த மாணவர் கூட வெற்றிபெற்றதாக அறிவிப்பதன் பின்புலத்தையும் விளக்குகிறார். ஒரு நிமிடம் இதற்கான உங்கள் பதிலை நினைவில் நிறுத்தி பின்பு வினோபாவின் விளக்கத்தை அடையுங்கள். தேர்வு பற்றி அவரது கூற்று:

மக்கள் தங்கள் வயிற்றைச் சுத்தம் செய்து கொள்வதற்காக உட்கொள்ளும் பேதி மருந்து போன்றதே தேர்வு

“கற்றலுக்கான ஆற்றலை விழித்தெழச் செய்து அறிவுக்கான திறவுகோலைக் கையில் கொடுப்பதே கல்வி” என்பதே அவரது வாதம். அதற்கே 33 மதிப்பெண்.

மூன்று அறிதல்கள்

உடலுக்கும் மனத்திற்கும் உயிருக்கும் தேவையான உணவைத் தேடுவது அனைத்தையும் கல்வியாகப் பார்க்கிறார் வினோபா. இம்மூன்று தளத்திலும் சிறந்த அறிதல்களைப் பெற நமக்குக் கிட்டிய கருவிகளாக அவர் கொண்டுள்ள எளிய பட்டியல்:

இரக்கமுள்ள இதயம், வினா எழுப்பும் அறிவு, பசியோடு கூடிய வயிறு

அதனால்தான் தன் வாழ்க்கையைத் தானே நடத்திக்கொள்ளும் அளவுக்கு உடல் உழைப்பில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்கிறார். அதனூடாகவே மூன்று தளத்திலும் நம் அறிதல் விரியும் என்பது கல்வியை வடிவமைக்க வலுவான சட்டகம்.

உன்னத உடலுழைப்பு

ஒன்று அல்லது இரண்டு மணி நேரமே புதிதாக ஏதாவது கற்பதற்காக ஒதுக்கவேண்டும் என்கிறார் வினோபா. மற்ற நேரங்களில்?

ஜீவனத்துக்கானவற்றைச் செய்து முடித்த பின்னரே வேதம் படிக்க வேண்டும்

நம்முடைய வாழ்க்கைக்கான உழைப்பே பெரும்பகுதியான கல்வியை அளிக்க வேண்டும் என்பதே அவரது வாதம். அதனால்தான் உடலுழைப்பிற்கு குறைந்த ஊதியம் என்பதைக் கண்டிக்கிறார்.

மேலை நாடுகளில் வீடு வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் மற்றொருவருக்கு வீட்டைக் கொடுக்கும் முன்பு சுத்தம் செய்ய ஒப்பந்த ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவது வழக்கம். அதற்கான கட்டணம் இறுதியாக வெளியேறியவரிடம் வசூலிக்கப்படும். நம் நாட்டு மதிப்பிற்குக் கிட்டத்தட்ட 20ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதுண்டு. காரணம் அந்த உடலுழைப்புக்கு கொடுக்கப்படும் மதிப்பும் அப்பணியைச் செய்வதில் இருக்கும் நேர்த்தியும்தான்.

சுத்தம் செய்ய வருவோர் மிக நவீனமான கருவிகளுடனே வருவர். கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் குளிருக்காக ஜன்னல் கதவுக்கு இரண்டடுக்குக் கண்ணாடிக் கதவு பொருத்தப்பட்டிருக்கும். வீடு எத்தனையாவது மாடியில் இருந்தாலும் சரி, ஜன்னல் கதவுகளின் வெளிப்புறத்தைக்கூடத் துளியும் அசடின்றி சுத்தம் செய்யும் திறம்மிக்கவர்கள். நிபுணர்கள். தொழில் தர்மம் மிக்கவர்கள்.

ஆக அறிவு சார்ந்த வேலைக்கு ஊதியம் என்பது அவ்வேலையை அதே அளவு திறமையாகச் செய்ய பலர் இப்போதைக்கு இல்லை என்னும் நிலை நீடிக்கும் வரை மட்டுமே. உடல் உழைப்பின் மதிப்பிழப்பு குறைவான உடல் உழைப்பை அதனினும் குறைவான ஊதிய விகிதத்தில் செய்து முடிக்க அதிக மக்கள் தயாராக இருக்கும் வரை மட்டுமே.

உடல் உழைப்பு இல்லாமல் முடிக்கவியலாத செயல்களுக்கு திறமையான ஆட்கள் இல்லை எனும் நிலையில் அவர்களின் ஊதியம் பல மடங்கு உயர்வதைக் காண முடியும். தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான விகிதம் போலவே இதுவும்.

அறிவு சார்ந்த வேலைக்கான கல்வியைப் பெற்ற பலரும்கூட தேவை குறைவாக இருப்பதால் இன்று உடல் உழைப்புக்கே திரும்பியுள்ளதை அறிவோம். பொறியியல் படித்த மாணவர்களை ஏழு நாட்களும் பணிபுரிய வேண்டிய ஒப்பந்த வேலைக்கு ஆகக் குறைந்த ஊதியத்திற்கு அமர்த்திக்கொள்ளும் நிறுவனங்கள் மலிந்துவருகின்றன.

உடலுழைப்பையும் அறிவுசார்ந்த வேலையையும் இவ்வளவு ஏற்றத்தாழ்வாக மதிப்பிடுவது மாபெரும் அநீதி

வினோபா காலத்தின் ஊதியம் உடலுழைப்புக்கு 1 ரூபாயாகவும் அறிவுசார் வேலைக்கு 30 ரூபாயாகவும் இருந்திருக்கிறது. தற்கால நிலமை பலமடங்கு மேம்பட்டிருப்பதாகவே எண்ணுகிறேன்.

ஆனாலும் உடலுழைப்பைக் கோரும் பணிகளும் அறிவுசார் பணிகளும் சமநிலைக்குத் திரும்புவதன் சாத்தியங்கள் பற்றிய சிந்தனையைத் தூண்டும் பத்தி.

பகடி

வினோபாவின் பகடி பல இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைத்துவிடுகிறது. இதுவரை நாம் பார்த்த மேற்கோள்களிலேயே அவரது நகைச்சுவை உணர்வை இனம் கண்டிருக்கலாம். இல்லையெனினும் இறுதியாக,

ஒருவன் குளிரிலும், பனியிலும், வெயிலிலும் மழையிலும் வயலில் வேலை செய்யத் தகுதியற்றவன் என நிச்சயமான பிறகே வேளாண் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படுவான்

இதையும் விளக்கி எழுதினால் புத்தகத்தை மறுபிரதி எடுத்தது போல ஆகிவிடும். வாங்கிப் படியுங்கள். நல்ல அனுபவமாக அமையும்.

48 பக்கங்களே கொண்ட மிகச்சிறிய புத்தகம், ஆனால் செறிவான கருத்துக்கள் அடங்கியது. வாங்கிப் பலமுறை படியுங்கள். ஏன் இப்படிச் சொன்னார் என்பதும், இக்கூற்று நிகழ்காலக் கல்வித்திட்டத்திற்கு எந்த அளவு பொருந்துகிறது என்பதும் புரியும்.

இறுதி

செயலே முக்கியம் என்று பலமுறை வலியுறுத்தியும் இப்புத்தகத்தை வாசித்து கடந்துபோனால் வினோபா வருத்தம் கொள்வார்.

எனவே உடனடியாக முடிந்த இரண்டு செயல்கள்.

ஒன்று, இப்புத்தகம் குறித்த அறிமுகத்தை எழுதிவிடுவது. இதோ முடிந்துவிட்டது. எழுதியதால் அதன் சாரத்தை மறுவாசிப்பு வரை நினைவில் நிறுத்திச் சிந்திப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திக்கொண்டுள்ளேன்.

இரண்டு, திட்டமிட்டு கற்றுக் கொடுப்பதை விடுத்து என் மகளுக்கு இயல்பான ஆர்வம் எங்கிருக்கிறதோ அதையொட்டிய அறிதல்களைக் கடத்துவது.

நன்கு குளிர்ந்த நீர் இருந்த புட்டியில் வெளியில் தொற்றிக்கொண்டிருந்த நீர்த்திவலைகளைக் கண்டு புட்டியில் துளையுள்ளது என ஆராய்ந்துகொண்டிருந்தாள். உலோகக் குவளையில் தண்ணீர் பிடித்து அதன் வெளிப்புறத்தையொட்டி நீர்த்திவலைகள் படர்வதை வேடிக்கை பார்த்தோம். அதற்குப்பின் இருக்கும் அறிவியலை முழுதும் புரிந்துகொள்ளும் வயதில்லை. அதனால் காற்றில் நிறைய நீர் இருக்கிறது என்ற அளவிலேயே நிற்கிறது.

இறுதியாக வினோபாவின் வார்த்தைகள்

விளையாட்டு போல கல்வியும் நிகழ்வதே தெரியக்கூடாது.

குழந்தைகளுக்கு வேடிக்கை பார்ப்பது சலிப்பதே இல்லை. கல்வி காற்றில் நறுமணம்போல விளையாட்டுடன் கலந்துவிடும்போதே இயல்பான கற்றல் நிகழும்.

தொடர்புடைய கட்டுரைகள்: