கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் இருவரும் தானம் பெற்றும் வங்கிக்கடன் கொண்டும் 10,000 ஏக்கர் விளைநிலத்தை ஏழைகளுக்கு பகிர்ந்து அளித்திருக்கின்றனர்.

சுதந்திரத்தின் நிறம் புத்தகத்தை தன்னறம் பதிப்பகத்தின் தளத்தில் வாங்கலாம். வாங்கி வாசிக்க, பகிர்ந்துகொள்ள வேண்டிய புத்தகம்.

“அணைகட்டுவதை எதிர்த்து கட்டுரை எழுதுவதா? அதற்குப் பதிலாக அணையில் குதித்து தலையால் முட்டி உடைக்கலாம்.” என்று அருந்ததி ராய்க்கு எதிர்வினையாற்றியவர் ஜெகந்நாதன். களப்பணியே அவரது வழி. அவரது வரலாற்றைப் படித்துவிட்டு அறிமுகக் கட்டுரை எழுதுவது மட்டுமே இப்போது என்னால் இயன்ற களப்பணி என்பது சற்று கூச்சமாகவே உள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த லாரா கோப்பா கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் அருகமர்ந்து அவர்களது வாழ்க்கையைப் பதிவுசெய்துள்ளார். கூடவே வினோபா, குமரப்பா, பூமி, சத்யா என மேலும் பலர் அளித்திருக்கும் பேட்டிகளும் முக்கியமானவையே. பேட்டியை வழக்கமான குறுகிய கேள்வி பதில் சட்டகத்தினுள் அடைத்துவிடாமல் இயல்பான நீண்ட உரையாடல் மற்றும் நினைவோடை வடிவில் தொகுத்திருப்பது தடையில்லா வாசிப்புக்கு உதவுகிறது.

குழந்தைகளுடன் கொண்டாட்டம், ஆசிரம வாழ்வு மேற்கத்திய கலாச்சாரத்துடன் மோதி எழுப்பும் கேள்விகள், இந்தியச்சூழல் குறித்த நுண்ணிய அவதானிப்பு என ஒழுகும் லாராவின் பயண அனுபவம் இந்நூலைத் தொகுத்துக் கட்டும் ஒரு வலுவான சரடாக அமைகிறது.

மறுபக்கம் கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதனின் வாழ்க்கை நகர்வுகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சத்தியாக்கிரக வெற்றிகள், பதட்டப்பட வைக்கும் கள யதார்த்தங்கள், எளியோருக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் வன்முறைகள் மற்றும் கண்கள் பொங்குமளவு நெகிழவைக்கும் தியாகங்களால் நிரம்பிவழிகின்றன.

ஆங்கிலத்தில் பேட்டி எடுத்து, இத்தாலிய மொழியில் புத்தகமாகி பின்னர் ஆங்கிலம் வழியே தமிழுக்கு வந்திருக்கிறது. எனினும் சேதாரத்தின் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதே B.R.மகாதேவனின் மொழிபெயர்ப்புக்கு புகழ்சேர்க்கிறது.

ஒரு சிறந்த திரைக்கதையின் வடிவம் உள்ளடக்கத்தில் காணக்கிடைக்கிறது. திறமையான இயக்குநர் ஒருவர் இவ்வரலாற்றுக்கு உயிர்கொடுத்து வணிக அளவில்கூட வெற்றிபெறச் செய்துவிட முடியும்.

ஜெகந்நாதன்

கோவர்த்தனகிரியை கிருஷ்ணன் தன் பிஞ்சுக்கைகளால் தூக்கி நிறுத்தியது போல் இந்த வயதானவர் (ஜெகந்நாதன்) மலை முன்னாள் நின்று கொண்டிருக்கிறார் - டேவிட் ஹெச். ஆல்பர்ட்

அப்பா பர்மாவிலிருந்து அனுப்பிய சட்டையை தீயிலிட்டு வெற்றுடம்புடன் வீடு திரும்பும் சிறுவனின் பிம்பம் ஜெகந்நாதனின் வாழ்க்கை எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதற்கு சாட்சியாகி நிற்கிறது.

அண்ணன் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக ராணுவத்திற்கு ஆள்சேர்க்க தம்பி ஜெகந்நாதனோ ஆங்கிலேயர்களுக்கு எதிராக சத்தியாக்கிரப் போராட்டங்களுக்கு ஆள்சேர்க்கிறார். நாகரீக உடையணிந்து டென்னிஸ் விளையாடிய மகன் இளமையிலேயே தலையை மழித்து துறவிபோல ஆகிவிட்டானே என்று தவித்த தாய்க்கு மகன் திருமணம் செய்துகொண்டது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் காந்தியின்மேல் ஈர்ப்புகொண்ட தந்தையோ, தன் மகன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த கிருஷ்ணம்மாளை மணமுடித்திருப்பது கண்டு சினம்கொள்கிறார். அழகிய முரண்கள் நிறைந்த உறவு முடிச்சுகள் கொண்ட வாழ்க்கை.

சென்னை கடற்கரையில் ஒருங்கிணைப்படும் சத்தியாக்கிரக கூட்டம் ஒன்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது ஆங்கிலேய அரசின் ஆணை. தேசியக்கொடியை முந்தைய நாள் இரவே மணலில் பாதுகாப்பாக புதைத்து வைத்து, காவலர்களை ஏமாற்றி, பேரணி வடிவைத் தவிர்த்து காற்று வாங்குபவர்கள் போல உள்நுழைந்து கூட்டத்தை ஆரம்பிக்கிறார் ஜெகந்நாதன்.

இவ்வாறாக, தமிழ்நாடெங்கும் ரகசியக் கூட்டங்கள் நடத்த ஜெகந்நாதன் மேற்கொள்ளும் எத்தனங்கள் அக்கால போராளிகளின் உழைப்பை முன்வைக்கின்றன. இந்நிகழ்வுகள் வாசிக்க சுவாரசியமாக கோர்க்கப்பட்டிருப்பதும் ஒரு பெரும் பலம்.

சிறையின் சிரமங்கள் குறைந்து வசதிகள் அதிகரிக்கும்போதே தான் முக்கியமான தலைவராக ஆகிவிட்டிருப்பதை உணர்கிறார். “சிறை என்றாலே உற்சாகமாக ஓடுகிறாரே, அவரை நீ எப்படி படுத்தி எடுத்திருப்பாய்?" என்று மற்றவர்கள் கிருஷ்ணம்மாளை பகடி செய்யும் அளவுக்கு சிறை அனுபவங்கள் பெற்றவர்.

கரும்பு பிழியும் பாரம்பரிய எந்திரங்களை பறிமுதல் செய்து அகற்ற முயலும் வண்டியின் சக்கரத்தின் முன் தலையை வைக்கிறார். அவரது செயலால் துணிவுகொண்டு மேலும் 400 பேர் சாலையில் அமர்கிறார்கள், சிலர் கைக்குழந்தைகளுடன். சுதந்திரத்திற்குப் பிறகு சொந்த அரசை எதிர்த்து ஜெகந்நாதன் முன்னெடுத்த முதல் சத்தியாக்கிரகம் இது.

இவர்களைப்பற்றிய ஆவணப்படம் ஒன்று பார்க்க வாய்த்தது. இப்புத்தகத்துக்கு மிகப்பிந்திய காலத்தில் எடுக்கப்பட்டது. ஜெகந்நாதனுக்கு கண்ணும் காதும் பலவீனமாகிவிட்ட நிலை. முற்றிலும் முதிர்ந்து கனிந்து படுக்கையில் இருக்கும்போது கூட “என்ன சிந்தனை?” என்று கேட்கும் கிருஷ்ணம்மாளுக்கு “பீகாரில் 500,000 ஏக்கர் நிலம் பிரித்துக்கொடுக்க வேண்டிய வேலை மீதியிருக்கிறது” என்று பதிலளிக்கிறார். ஊக்கம் நிறைந்த மனத்திற்கு தளர்ந்த உடல் ஒரு தடையே இல்லை என உணர வைக்கும் காட்சிகள்.

கிருஷ்ணம்மாள்

கிருஷ்ணம்மாள் அரண்மனை இல்லாத ராணி, தொட்டதை எல்லாம் துலங்கவைக்கும் தேவதை, அட்சய பாத்திரம் பெற்று ஏழைகளின் பசிப்பிணி போக்கும் நவீன மணிமேகலை - டேவிட் ஹெச். ஆல்பர்ட்

தன் சிறுவயதில் அன்னை கூலி வேலை செய்து பட்ட துயரங்களைப் பார்த்து வளர்ந்த கிருஷ்ணம்மாள் பின்னாளில் அனைவரின் துயரத்தையும் களைவதையே வாழ்நாள் குறிக்கோளாக ஏற்கிறார்.

தமிழகத்தின் முதல் தலித் பெண் பட்டதாரி. ஒரு முறையாவது காந்தியைப் பார்த்துவிட மாட்டோமா என ஏங்கும் அவருக்கு ஒரு வாரம் காந்திக்கு பணிவிடை செய்யும் வாய்ப்பு அமைகிறது. காந்தியிடம் ஒரே ஒரு சொல் பெற்றவர்கள் கூட தன் வாழ்நாள் முழுவதையும் மக்கள் சேவைக்கென அர்ப்பணிப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு வாரம் காந்தியின் அருகில் இருந்தவர் நிரந்தரமாக பொதுவாழ்வில் தன்னை இணைத்துக்கொண்டதில் வியப்பில்லை. அதுவும் தன் திருமண வாழ்வைக்கூட பொதுச்சேவையே முடிவுசெய்யுமளவு:

சமூக அக்கறை சிறிதும் அற்ற ஒருவரை திருமணம் செய்துகொள்வதை என்னால் நினைத்தே பார்க்க முடிந்திருக்கவில்லை - கிருஷ்ணம்மாள்

கனிவான உறுதியான அந்த முகத்திற்குப் பின்னால் கைக்குழந்தையுடன் சத்தியாக்கிரகத்தில் இறங்கத் துணியும் வலுவான ஒரு போராளி உறைந்திருப்பதை புத்தகத்தின் பக்கங்கள்தோறும் பார்க்கமுடிகிறது.

வன்முறை தன் கோர முகத்தைக் காட்டிய கீழ்வெண்மணியில் 44 கூலித்தொழிலாளர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட நாளிலிருந்து மூன்று வருடங்கள் காந்திய வழியில் போராடி அவர்களுக்கு நிலம் பெற்றுத்தந்த சாதனையாளர்.

பீகாரில் ஜெயப்பிரகாஷ் நாராயண் பங்கேற்ற கூட்டத்தில் கல்வீச்சு பட்டு இரத்தம் சொட்டும்போதும் நிறுத்தாமல் உரையைத் தொடர்கிறார். பீகாரிப் பெண்போல மாறுவேடத்தில் சிறையிலிருக்கும் ஜெகந்நாதனைப் பார்த்து வருகிறார். நெருக்கடிநிலைப் பிரகடனம் அமலில் இருக்கும்போது நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லும் வழியில் காவலர்களிடமிருந்து தப்பியோடுகிறார். பல ஆண்டுகளாக தலித்துகளின் காலடி படாத தெருக்களில் பெண்களை மட்டும் ஒருங்கிணைத்து அரிவாளும் வேல்கம்பும் ஏந்தி நிற்கும் மேல்சாதியினர் நடுவே பேரணி நடத்துகிறார்.

எளியோர் துயர் கண்டு உள்ளூறும் அணையா அனலே இத்தகைய துணிச்சலான அருஞ்செயல்களுக்கு ஊற்றாக அமைகிறது. இவ்வரலாற்றை புத்தகத்தில் விரிவாகப் படிக்கும்போது கனவெனவே ஆச்சரியமளிக்கிறது. இன்றும் ஒருநாள் பயணத்தில் எட்டிவிடும் தூரத்தில்தான் அவரது காலடி இருக்கிறது என்பது பெருமிதமாகவும் இருக்கிறது.

லாரா கோப்பா

சுற்றி மொய்க்கும் ஓட்டுநர்களைப் பார்த்து “காந்தி கிராமத்திற்குப் போகவேண்டும். ஆட்டோ வேண்டாம். பஸ்ஸிலேயே போய்க்கொள்கிறேன்” என்று தமிழில் பேசி அதிரவைக்கும் காட்சியுடன் லாராவின் பயணம் தொடங்குகிறது.

கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் இருவரின் வாழ்க்கை வரலாறு விரியுந்தோறும் இது கனவல்ல, இந்நிலத்தில் நடப்பதுதான் என்று நம்மை உணர வைப்பவை லாராவின் அனுபவப்பதிவுகள்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் திருமணம் நடந்த விதத்தை அறிந்தபின் தன் திருமணத்திற்கு 10 பேருக்கு மேல் அழைப்பதில்லை என்று முடிவெடுக்கிறார்.

வெறும் ரீங்காரத்தைக் கொண்டு இத்தாலியின் பாடல் இப்படித்தான் இருக்கும் என சிறுவர்களை நம்பவைப்பதும், “ஆடத்தெரியாதவன் தெருக்கோணல்” என்ற வழக்கிற்குள் அறியாமல் சிக்கிக்கொள்வதும், சாக்லேட் கொடுத்தே ஜெகந்நாதனைப் பேசவைப்பதும் என குறும்புகளுக்கு குறைவில்லாமல் நகர்கிறது லாராவின் நாட்கள்.

இரண்டு குழந்தைகளை இத்தாலியில் விட்டுவிட்டு இந்தியா வந்து கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் பற்றிய வரலாற்றைப் பதிவுசெய்யும் உள எழுச்சியிம் ஊக்கமும் லாராவுக்கு வாய்த்தது தமிழ்நாட்டுக்கு கிடைத்த நற்பேறு.

வினோபாவின் ஆன்மிக நீரூற்று

வினோபா 13 வருட காலகட்டத்தில் 40 லட்சம் ஏக்கர் நிலத்தை தானமாகப் பெற்றார். உலக வரலாற்றில் இதற்கு முன் இதுபோல ஒரு சாதனை எந்த இடத்திலும் நடந்திருக்கவில்லை - லாரா

வினோபாவின் பூமிதான பயணத்தில் உடன் வந்த மேலைநாட்டவர் புரிந்துகொள்ள முடியாத அளவு நிலம் தானமாகப்பொழிகின்றது. வருவாய் தரும் நிலத்தை ஏன் தானம் கொடுக்கிறார்கள் என அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. புத்தகத்தை வாசிப்பவர்கள் இக்கேள்விக்கான பதில் வினோபாவின் ஆன்மிக நோக்கில் இருக்கிறது என உணர முடியும். புத்தகத்துடன் அனுப்பப்பட்டிருந்த அடையாளக்குறிகளில் ஒன்றில் பின்வரும் கூற்று அச்சிடப்பட்டிருந்தது:

“பாலைவனத்தின் பேரதிசயமே எங்கோ ஒரு நீரூற்றை தன்னுள் ஒளித்து வைத்திருப்பதுதான்” - குட்டி இளவரசன்

வினோபாவிடம் தமது நிலத்தை தானமாகக் கொடுத்த அனைத்து நில உடைமையாளர்களையும் இப்பாலைவனத்தோடு இணைக்கமுடியும். வினோபா அவர்களிடம் தேடியதும் இந்த ஆன்மிக நீரூற்றைத்தான்.

வினோபாவின் வார்த்தைகளில் “இருப்பவனிடமிருந்து பிடுங்கி இல்லாதவனுக்கு கொடுத்து அவனையும் நில உடைமையாளனாக்குவது அல்ல நோக்கம். இல்லாதவனுக்கு தானமாகக் கொடுக்கும்போது எட்டும் ஆன்மிக உயரத்தை ஒருவரை உணரச்செய்வதும் அவரை அங்கேயே நிலைக்கச்செய்வதுமே மேலான நோக்கம்”.

“மானிட இயல்பானது, அன்பின் அழைப்பிற்கு ஒவ்வொரு முறையும் இசையும்” என்ற அடிப்படையைக் கொண்டது அகிம்சை - காந்தி

ராமகிருஷ்ண ரெட்டி என்பவர் ஹரிஜன் ஒருவரின் நிலத்தைப் பெற அவரது காலில் விழுந்தும், தன் மனைவியின் பெயரிலிருக்கும் நிலத்தை அவரிடமிருந்தே தானமாகப் பெற உண்ணாவிரதம் இருந்தும் இம்முயற்சியை சாதிக்கிறார். கண்ணீரின்றி கடக்க இயலா பக்கங்கள்.

பூமிதானம் பெறும் பயணத்தின்போது வினோபாவின் அன்பின் அழைப்பிற்கு ஒருவர் “என்னிடம் நிலமில்லை , நான் என் வாழ்நாளையே தானமாகக் கொடுக்கிறேன்” என்கிறார்.

காந்தியச் செயல்பாடுகள் அனைத்திலும் மறுதரப்பை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பைவிட அவர்களையும் தன்பக்கம் வென்றெடுக்க வேண்டும் என்ற நேர்மறை எண்ணமே அடிப்படையாக செயல்படுவதைப் பார்க்க முடிகிறது.

ஆழமும் அகலமும்

“செயல்கள் உண்மையாக அமைந்துவிடுகையில், அதனை மெய்ப்பிப்பதற்கான வாதங்கள் தேவையில்லை” - வினோபா பாவே

வினோபாவின் செயல்வழிகளிலிருந்து குமரப்பா முரண்படும் தருணங்கள் நாம் கவனிக்க வேண்டியவை. களப்பணியில் இருவேறு திசைகளில் ஆற்றலைக் குவிக்கும் வாய்ப்புகள் உள்ளன. வினோபா நிலத்தை தானம் பெறுவதோடு கடந்து சென்றுவிடுகிறார் என்பதே அவரது வழி மீதான அதிருப்திக்குக் காரணம்.

தானமாகக் கொடுக்கப்பட்டது விவசாயத்திற்கு உதவாத தரிசு நிலம் என்றாலும், காலப் போக்கில் நல்ல நிலங்களும் தானம் தரப்படும் என்ற நம்பிக்கையோடு அகலத்தை விரிவாக்குகிறார் வினோபா. அதனால்தான் 40 லட்சம் ஏக்கர் நிலத்தை தானமாகப் பெற முடிந்திருக்கிறது.

சர்வோதயம் என்னும் சொல்லுக்கு அனைவரது நலம் என்பதே பொருள். தானம் கொடுப்போரும், தானம் பெறுவோரும் நலம்பெற வேண்டும் என்பதே வினோபாவின் நிலைப்பாடு.

பதிவின்போது நிலம் மறுக்கப்பட்டால், நிலம் கிடைக்கும் என்று காத்திருக்கும் மக்களுக்கு யார் பதில்சொல்வது என்னும்போது வினோபாவின் தரப்பு மௌனமாகிவிடுகிறது என்பதையும் பதிவுசெய்கின்றனர். ஜெகந்நாதன் மீண்டும் சத்தியாக்கிரகம் நடத்தி நிலத்தைப் பதிவுசெய்து தருவதே சரியான தீர்வாக இருக்கும் என்ற முடிவில் செயல்படுகிறார்.

குமரப்பாவோ நிலம் பதிவுசெய்யப்பட்டு ஒரு கிராமம் தன்னிறைவடையும் வரை செயல்பாடுகள் தொடர வேண்டும் என நினைப்பவர். ஆழமே அவருக்கு நிறைவளிக்கிறது. அதனால்தான் வினோபாவை விட்டு விலகிச்செல்ல நேரிடுகிறது. புத்தகத்தில் இருவரும் பிரியும் தருணத்தை வாசிக்கம்போது பூமிதான இயக்கத்தின் மகத்தான வெற்றி நழுவிப்போவதை உணர முடிந்தது.

பொதுவுடைமையின் போதாமை

நமக்கு உணவளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் யாரும் உழைக்கவில்லை, அவரவர்களது சொந்த நலன் கருதி உழைத்ததன் விளைவையே நாம் உணவாக அடைகிறோம். - ஆடம் ஸ்மித் 1

சிறு அளவிலான பூமிதானங்கள் ஒரு கட்டத்தில் ஒரு கிராமமே தானமாக அளிக்கப்படுமளவு வளர்கின்றன. அவ்வாறு தானமாகப்பெற்ற ஒரு கிராமத்தின் “மொத்த நிலத்தையும் கிராமத்தின் பேரிலேயே வைத்திருந்து அனைவரும் ஒன்றாக உழைத்து விளைச்சலை ஒரு குடும்பமாக இருந்து பங்கிட்டுக்கொள்வது” என்ற சோதனை முயற்சி தோல்வியைத் தழுவுகிறது.

சிந்திக்கத் தூண்டும் ஒரு நிகழ்வு இது. யாரும் பட்டினியாக இல்லை. தனக்கென்று வருமானம் இல்லையே என்பது குறித்த கோபம் இருக்கிறது. சோம்பேறித்தனம் மேலோங்குகிறது. ஆனால் நிலத்தைப் பங்கிட்டு தனி நபர்களுக்குக் கொடுத்த பிறகு ஊக்கத்துடன் உழைக்கத் தொடங்குகின்றனர்.

ஒவ்வொரு மனிதரும் தனது சுயநலம் சார்ந்த ஆசைகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு பொதுநலனைக் குறித்து சிந்திக்க ஆரம்பிக்கும்போதுதான் அது[கூட்டுப்பண்ணை] வெற்றிபெற முடியும்.

கூட்டுப்பண்ணை சாத்தியப்படாது என்பதல்ல இதன் சாரம். வெற்றிகரமான கூட்டுப்பண்ணையை நடத்த அதன் உறுப்பினர்களுக்கு தகுந்த பயிற்சியும் மனப்பக்குவமும் வேண்டும் என்பதே.

பிறர்நலம் வேண்டுதல்

கடமை யாவன தன்னைக் கட்டுதல்

பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல்

உலகெல்லாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும்

கடமையெனப்படும்; பயனிதில் நான்காம்

அறம், பொருள், இன்பம், வீடெனும் முறையே

-பாரதியார் 2

பிறர்துயர் தீர்த்தல் மற்றும் பிறர்நலம் வேண்டுதல் இரண்டும் கடமைகள் என்கிறார் பாரதியார்.

“ஒரு வருடம் என்னோடு இருந்துவிட்டாய், இனி நீ தமிழ்நாடு சென்று பூமிதான இயக்கத்தை நடத்து” என்று வினோபா சொல்லும்போது ஜெகந்நாதன் மீண்டும் மனைவியைப் பார்க்கப்போகிறோம் என்ற மகிழவில்லை. இங்கிருக்கும் வேலைகளை யார் செய்வது என்றெண்ணி மனைவியை வரவழைத்து வினோபாவுக்கு உதவக்கோருகிறார். வந்து சேரும்போதே உடல்நலம் குன்றிய மனைவியை ஆசிரமத்திலிருப்போர் கவனித்துக்கொள்வர் என்ற நம்பிக்கையோடு தமிழகம் திரும்பும் ஜெகந்நாதன் கூறுவது:

என்ன செய்ய, அவருக்கு நானும் எனக்கு அவரும் இரண்டாம் துணைவர்தானே! எங்களது முதல் திருமணம் சமூக சேவையோடு அல்லவா? - ஜெகந்நாதன்

மகள் சத்யாவின் இளம்பருவம் குறித்த பேட்டியில் ஒரு தருணம். சத்யாவின் கேள்விக்கு “ஏழைகளின் துயரம் தீரும்போது நான் உன்னுடனே தங்கிவிடுவேன்” என்கிறார் ஜெகந்நாதன். அன்றிலிருந்து தந்தை உடனிருக்க வேண்டி “கடவுளே, இன்றைக்கே ஏழைகளின் எல்லா துன்பங்களும் தீர்ந்துவிட வேண்டும். நாளையே அப்பா வந்து என்னுடன் இருக்க வேண்டும்” என பிரார்த்திக்கிறார்.

ஊக்கத்தின் ஊற்று எளியோர் நலம்பெறுவதில் இருப்பதனால்தான் சொந்த மகனையும் மகளையும் வருடக்கணக்கில் பிரிந்து வாழ்வதும் பல்வேறு சிறைகளில் சரியான உணவு, உடை மற்றும் இடமில்லாமல் துன்பப்படுவதும் அவர்களுக்குத் தடைகளாகவே தோன்றவில்லை. பிறர்நலம் நாடுவோர் உள்ளம் செல்லும் திசைவேகம் என்றுமே தடையற்றது.

தகிக்கும் தனல்

எத்தனை துன்பம் வந்தாலும் இறுதி வரை போராடும் ஊக்கத்தைக் கொடுப்பது எது என்ற கேள்விக்கு இவர்களின் வாழ்க்கை பதில் சொல்கிறது.

சுதந்திரத்திற்குப் பின் சொந்த அரசாங்கமே எதிர்தரப்பில் நிற்கிறது. பெற்ற குழந்தைகளைப் பிரிந்திருக்க நேரிடுகிறது. நில உடைமையாளர்கள், மேல்சாதியினர் என்று பலரின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். சிறையில் அமர்ந்து காலுக்கு ஓய்வு கொடுக்குமளவு கூட இடமில்லாத துன்பங்களும் சேர்கின்றன.

எதுவுமே இவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. எப்படி இந்த பெருந்துன்பங்களைத் தாண்டமுடிகிறது என்பதற்கு பதில்:

மனரீதியாக நீங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கவில்லை என்றால், உங்கள் இலக்கு உங்கள் மனதில் தனல்போல் தகிக்கவில்லை என்றால், எளிதில் அணைத்துவிடுவார்கள் - கிருஷ்ணம்மாள்

பூமிதானத்துக்காக தமிழ்நாட்டில் நடைபயணம் ஆரம்பிக்கும் முன் வினோபா மூன்று நாட்கள் உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறார். வினோபாவுக்கு உண்ணாவிரதம் என்பது போராட்ட வடிவம் மட்டுமல்ல. உன்னத செயல்களைத் தொடங்கும் முன்பு மேற்கொள்ளும் பிரார்த்தனை கூட என்பது இப்புத்தகத்திலிருந்து கிடைத்த விந்தையான ஒரு அறிதல்.

புல்டோசரின் முன் கைக்குழந்தையோடு அமர்வதற்கும் லாரி சக்கரத்தின் குறுக்கே தலையை வைப்பதற்கும் இலக்கு தகிக்கும் தனல்போல் உள்ளுறைய வேண்டும்.

ஆன்மா இழந்த இந்தியா

எந்த தேசம் அதை (காந்தியத்தை) உருவாக்கியதோ, அந்த தேசமே அதில் இருந்து விலகி வந்துவிட்டது. ஏதோ தவறுதலாக நுழைந்துவிட்டது போல் பதறி அடித்துக்கொண்டு அவசர அவசரமாக வெளியே வந்துவிட்டது - பூமிகுமார்

அரசே மதுக்கடைகளை எடுத்து நடத்துவது குறித்தும் பன்னாட்டு பெருநிறுவனங்களை கட்டற்று அனுமதிப்பது குறித்தும் கூரிய விமர்சனங்களை ஜெகந்நாதன் முன்வைக்கிறார்.

அரசு மதுக்கடைகளை நடத்துவதால்தான் விதவைகளும் அனாதைகளும் உருவாகிறார்கள். அரசு அடைந்த லாபத்தில் ஒரு பங்கைக்கொண்டு அவர்களது வாழ்வை மேம்படுத்த நாம் உழைக்க வேண்டியிருக்கிறது என மனம் வெதும்பும் ஜெகந்நாதன் கேட்பது எளிய கேள்வி:

அரசே காயத்தை ஏற்படுத்திவிட்டு மருந்தும் போட்டுவிடுகிறது. அதற்கு காயத்தை ஏற்படுத்தாமலே இருக்கலாமே? - ஜெகந்நாதன்

இந்திரா காந்தியின் அவசரநிலைப் பிரகடனத்தின்போது ஜெகந்நாதனும் கிருஷ்ணம்மாளும் பட்ட துன்பங்கள் அந்நாட்கள் எப்படி இருந்திருக்கும் என அதிர்ச்சியுடன் உணர வைக்கின்றன. ஆனால் ஜெகந்நாதனோ நாம் ஜனநாயகத்தின் உச்சம் என எண்ணிக்கொண்டிருக்கும் நிகழ்காலமே அதனினும் மோசமானது என்கிறார்:

ஆங்கிலேயர்கள் எவ்வளவோ தேவலை என்று அவசரகால அடக்குமுறைகள் சொல்லின. இப்போது அவசரகாலநிலை தேவலை என்று இந்த பன்னாட்டு முதலாளிகளும், அவர்களது கைக்கூலியாகச் செயல்படும் இந்திய அரசாங்கங்களும் நிரூபித்து வருகின்றன.

இறால்பண்ணைகளுக்கு எதிராக வழக்குதொடுத்து அவற்றை மூடும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பு ஒரு சட்டத்திருத்தம் பண்ணைகள் மேலும் இயங்கும்படி செய்கிறது. அதையொட்டிய ஒரு அதிர்ச்சியூட்டும் யதார்த்தத்தை ஜெகந்நாதன் முன்வைக்கிறார்:

மனதளவில் லஞ்சம் ஒரு நடைமுறை அம்சம்தான் என்று வாழப் பழகிவிட்டிருக்கிறோம். லஞ்சத்தின் கொடூர முகம் (இறால் பண்ணை போன்று) நம்நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் திட்டங்கள் தீட்டப்படும்போதுதான் தெரியும். - ஜெகந்நாதன்

லஞ்சம் மட்டுமல்ல, ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறில்லை என வாழப் பழகிக்கொண்டிருக்கும் நமக்கு நாம் இழப்பது குறித்த தன்னுணர்வு மழுங்கிவிட்டதென்றே நினைக்கிறேன்.

வன்முறையை எதிர்கொள்ளல்

என்னைச்சுற்றி அநியாயம் நடக்கும்போது எனக்கு மட்டும் நல்லது நடந்தால் போதும் என முடங்கிக் கிடக்க முடியவில்லை - லீலா (லாஃப்டி பணியாளர்)

தலித் கைதி ஒருவரை அடித்துக்கொன்ற 13 காவலர்களை பணிநீக்கம் செய்யுமாறு நீதிமன்ற தீர்ப்பு வருகிறது. காவல்துறை மேலதிகாரி காந்தியத்தின் பேரில் காவலர்களை மன்னிக்கக் கோரிக்கை வைக்கிறார். யேசுவையும் வள்ளுவரையும் படித்தறிந்திராத அம்மக்கள் காவலர்களை மன்னித்தனர் என்று அத்தருணத்தை ஜெகந்நாதன் விவரிப்பது பெரும் திறப்பு.

கீழ்வெண்மணியில் அரைப்படி நெல் அதிகமாகக் கூலி கேட்டதால் நில உடைமையாளர்கள் வெளியூரிலிருந்து கூலிக்கு ஆள் கொண்டுவந்து அறுவடை செய்ய முயல்கின்றனர். கூலிவேலை செய்வோர் கோபம் கொண்டு அந்த மேஸ்திரியை கொன்றுவிட, அதற்குப் பழிவாங்க 44 பேர் ஒரு குடிசையினுள் அடைக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டனர். எதிர்ப்பழிவாங்க நில உடைமையாளர் ஒருவர் 18 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

வன்முறையின் தொடர் கண்ணி அறுவதே இல்லை. இதன் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போதுதான் காந்தியத்தின் , அகிம்சை வழியிலான போராட்டத்தின் உன்னதம் புரியும்.

வன்முறையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த அந்த கிராமத்தில் கிருஷ்ணம்மாள் மற்ற காந்தியர்களுடன் மூன்றாண்டுகள் தங்கியிருந்து 74 குடும்பங்களுக்கு 74 ஏக்கர் நிலம் வாங்கித் தந்திருக்கிறார். தன்னிறைவுடன் வாழ வழிசெய்திருக்கிறார்.

இறுதிமொழி

லாரா கோப்பா இத்தாலி புறப்படும் முன் இறுதியாக, காந்தியின் பிறந்தநாளன்று, ஜெகந்நாதன் அனைவரையும் அழைத்து சொற்பொழிவாற்றுகிறார். இந்தியா சுதந்திரமடைந்த அன்று, மவுண்ட்பேட்டனின் அழைப்பை மறுத்து இந்து முஸ்லீம் இடையேயான கலவரங்களை மட்டுப்படுத்தும் முனைப்பில் இறங்குவதை சுட்டிக்காட்டுகிறார். காந்தியின் வேலை இன்னும் முடியவில்லை என்பதை முன்னிறுத்தி, அனைவரும் மூன்று முக்கிய உறுதிமொழிகளை ஏற்கின்றனர்:

“இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபடுவேன்; சாதிய ஏற்றத்தாழ்வு மறைய பாடுபடுவேன்; கிராம சுயராஜ்ஜியத்தை அமைக்கப் பாடுபடுவேன்”

முந்தைய இரண்டும் கிராம சுயராஜ்ஜியம் என்னும் இறுதி இலக்கின் முக்கிய மைல்கற்கள் என்கிறார் ஜெகந்நாதன்.

“ஏறமுடியாத சிகரம் என்று எதுவும் இல்லை. நாம் ஆரம்பிக்க வேண்டும், அவ்வளவுதான். எந்த ஒரு பெரும் பயணமும் சிறு அடியெடுத்து வைப்பதில்தான் தொடங்குகிறது." என்று காந்திய வழியில் நடக்கத் துணைவரவேண்டி அழைக்கும் குரலுடன் முடிகிறது இப்புத்தகம்.

இப்புத்தகத்தை வாசிக்கும் அனைவருக்கும் காந்தியத்தை நோக்கிய அகநகர்வு நிச்சயம். அந்தச் சிறு அடியை எடுத்து வைக்குமளவு புறநகர்வுக்குத் தேவையான உந்துதலை அடைய இன்னும் எத்தனை புத்தகங்கள் வாசிக்க வேண்டுமோ…

முற்றும்.

சுதந்திரத்தின் நிறம் புத்தகத்தை தன்னறம் பதிப்பகத்தின் தளத்தில் வாங்கலாம்.

அடிக்குறிப்புகள்


  1. “It is not from the benevolence of the butcher, the brewer, or the baker that we expect our dinner, but from their regard to their own interest." என்று ஆடம் ஸ்மித் கூறியதை நான் தோராயமாக மொழிபெயர்த்ததன் விளைவு. ↩︎

  2. பாரதியாரின் தெய்வப்பாடல்களில் ஒன்றான விநாயகர் நான்மணிமாலையிலிருந்து எடுக்கப்பட்ட பத்தி, சற்றே சுருக்கியளிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்ளடக்கத்தையும் விக்கிமூலத்தில் வாசிக்கலாம். ↩︎

தொடர்புடைய கட்டுரைகள்: