போர்க்காலத்தில் மரணத்தின் அருகாமையில் மானுடம் செல்லக்கூடிய இருண்ட ஆழங்களும், அவற்றைக் கடந்து நிற்கும் விழுமியங்களும் பற்றிய குறிப்புகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் செக்கோஸ்லோவாக்கியா நாடு பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சியில் இருந்தது. அவ்வாட்சியில் “தூக்குமேடைக் குறிப்பு” என்னும் இப்புத்தகம் பள்ளிக் குழந்தைகளுக்குக் கட்டாயப்பாடம் ஆக்கப்பட்டது. எந்த ஒரு கட்சிக்கும் அதன் உறுப்பினர்களிடம் தேவைப்படும் விழுமியங்கள் அனைத்தும் இப்புத்தகத்தில் திரண்டு நிற்கின்றன. நாட்டுப்பற்றும் நாட்டு மக்கள் மீதான அக்கறையும் உள்ளடக்கத்தில் ஊறியிருக்கின்றன. எனவே அரசு இதனைக் கட்டாயப் பாடமாக்கியதில் வியப்பில்லை.

வினோபா கல்வியில் வேண்டும் புரட்சி என்ற புத்தகத்தில் “உலகம் முழுவதும் கல்வி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது” என்கிறார். ஆனால் ஜூலிஸ் பதிவுசெய்யும் உணர்வுகளை மொத்த மானுடத்துக்கும் வெவ்வேறு காலத்துக்கும் தூர நிலங்களுக்கும்கூட விரித்துப் பொருள்கொள்ள முடியும் என்பதே இப்புத்தகத்தின் முக்கியத்துவம்.

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம் ஜெர்மனி ராணுவத்தின் வதைமுகாமில் அடைக்கப்பட்டிருந்த ஜூலிஸ் பூசிக் எழுதிய குறிப்புகளின் தொகுப்பு இப்புத்தகம். ஜெர்மனி ராணுவத்தைப் பொருத்தவரை கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசவிரோதிகள். அப்படி இருக்க செக் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் ராணுவத்தின் கையில் கிடைத்தால் என்னவாகும்?

விசாரணை என்னும் பேரில் எத்தனை வதைத்தாலும் உபயோகமான தகவல் எதையும் உதிர்த்துவிடாத அளவு அவருக்கு வலுவிருந்திருக்கிறது. அதேநேரம், சிறையினுள் இருந்தவாறே ஒரு புத்தகம் அளவுக்குத் தகவல்களை சிகரெட் அட்டையில் எழுதி சிறைக்கு வெளியே கரந்தனுப்ப துணிவும் இருந்திருக்கிறது.

பொதுவாக ஒரு புத்தகத்தை வாசிக்கும் முன் எழுத்தாளரைக் குறித்தும் புத்தகத்தின் பின்புலம் குறித்தும் சற்றேனும் அறிந்துகொள்ள முயல்வது வழக்கம். தமிழ்ப் பதிப்பில் இக்குறிப்புகளை எழுதியவரின் பெயர் Julice Buzik (ஜூலிஸ் பூசிக்) என்றிருக்க, அப்படி ஒருவர் இல்லை என்று இணையமே கைவிரித்துவிட்டது. வாசித்து முடிக்கும் வரை புத்தகத்தின் பின்னணியைப் பற்றி எந்த அறிதலும் இல்லை.

புத்தகத்தைப் பற்றிய எந்தச் சுட்டியும் கிடைக்காததால் வாசித்துக்கொண்டிருப்பது புனைவோ என்ற எண்ணமும் அவ்வப்போது வராமலில்லை. ஆனால் வரலாற்றின் விளிம்புகள் புனைவைவிடக் கூரியவை என்பதை இக்குறிப்புகளில் காணலாம்.

தூக்குமேடைக்குறிப்பு என்பதை Notes from Gallows என்று மொழிபெயர்த்துத் தேடியபோதுதான் Julius Fučík என்ற சரியான பெயர் கிடைத்தது.

அவரது பெயருக்கு செக் மொழியில் யூலியோஸ் ஃப்யூச்சீக் என்று ஒலி வடிவம் கொடுக்க வேண்டும். ஜூலிஸின் மறைவுக்குப் பின், 1950ல் உலக அமைதிக்கான சர்வதேச விருது அவருக்கு வழங்கப்பட்டது. இக்குறிப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிட்ட ஜூலிஸின் மனைவி அகுஸ்தினா பின்னர் கட்சியில் பெரும் பதவியிலிருந்தார். இவையெல்லாம் விக்கிப்பீடியா கொடுக்கும் கூடுதல் தகவல்கள்.

குதிரையின் வலு

ஜெர்மனி ராணுவத்திடம் அகப்படநேர்ந்தால் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று ஜூலிஸுக்கு ஏற்கனவே ஆணை விடுக்கப்பட்டிருந்தது என்று விக்கிப்பீடியாவில் ஒரு கூற்று உள்ளது. அவ்வாறு தற்கொலை செய்துகொள்ளாமல் சரணடைந்தது ஏன் என்பது முதல் அத்தியாயத்தில் அவரது விரைவான மன ஓட்டத்தில் சட்டென்று கடந்து போகிறது. தனது தோழர்களைக் காக்க வேண்டும் என்பது அவரது முடிவுக்கு காரணமாக இருந்தாலும், தற்கொலை செய்துகொண்டிருந்தால் வரலாற்றின் சில பக்கங்கள் எழுதாமலே விடுபட்டிருக்கும்.

ஏழடி தூரத்தில் இருக்கும் நீரை அருந்தக்கூட வலுவில்லாமல் நகர்ந்தே சென்று திரும்பும் அளவுக்குத் துன்புறுத்தப்பட்டவர். மருத்துவர்களே “இன்றோடு மரணம்” என்று எழுதிப் பதிவுசெய்யுமளவு சிதைந்த பின்னரும் மீண்டு வர ஏதோ ஒரு பிடிப்பு அவருள் இருந்திருக்கிறது. மறுநாள் உயிரோடு இருக்கும் அவரைப் பார்த்து “இவனுக்கு ஒரு குதிரையின் வலு இருக்கிறது” என்று அந்த மருத்துவர் சொல்வது அந்தப் பிடிப்பைத்தான்.

வதைமுகாம்கள் பற்றி நான் வாசிக்கும் இரண்டாவது புத்தகம் இது. முதல் புத்தகம் விக்டர் ஃப்ராங்கிள் எழுதிய “வாழ்வின் அர்த்தத்திற்கான மானுடத்தின் தேடல்” என்ற புத்தகம். “வதைமுகாம்களிலிருந்து உயிருடன் வெளிவந்தவர்கள் எதிர்காலம் குறித்த குன்றாத நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் மட்டுமே” என்பது விக்டரின் அவதானிப்பு. ஜூலிஸ் அக்கூற்றை மெய்ப்பித்திருக்கிறார்.

வதைமுகாமில் அடைபட்ட எழுத்தாளர் ஒருவருக்கு எழுத வாய்ப்பு கிடைத்துவிட்டால் அவர் மரணத்தைத் தாண்டியும் வாழ்ந்துவிடுவார் என்பதற்கு ஜூலிஸின் இப்புத்தகம் ஒரு சாட்சி.

எளிதில் துவண்டுவிட அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கும் வதைமுகாம்களில், எழுதுவதற்கான வாய்ப்பு கிட்டியதுடன் ஜூலிஸிடம் வெளிப்படும் நம்பிக்கை அவர் மரணத்தை வென்றதற்கான ஒரு முக்கியக் காரணமாகக் கருதுகிறேன்.

வாசித்து முடித்த பின்னர் விக்கிப்பீடியா காட்டிய அவரது நிழற்படம், அதில் பொங்கும் சிரிப்புடன் அவரது முகத்தைப் பார்க்கும்போது இதே நம்பிக்கையின் ஊற்றைக் கற்பனை செய்ய முடிகிறது.

ஜூலிஸ் பூசிக் நிழற்படம்

நிழற்படம் விக்கிப்பீடியாவிலிருந்து.

புன்னகை உறைந்து நிற்கும் அந்த முகத்தை நன்கு பார்த்துக்கொள்ளுங்கள். அந்தப் பற்களை விசாரணையின்போது உடைத்து எறிந்துவிட்டனர். அந்த முகத்தில் இரத்தம் உறையாத மயிர்க்கால்கள் ஏதும் இல்லை. சிறு உணவுத் துண்டுகூட உள்ளிறங்காத அளவுக்கு தொண்டை வீங்கிப்போயிருப்பதை எழுதியிருக்கிறார். ஆனாலும் அனைத்தையும் கடந்து, தூக்கிலிடப்படும்வரை உயிர்வாழும் அளவு வலுவும் நம்பிக்கையும் கனவும் கொண்டிருந்திருக்கிறார்.

பசும்புற்களும் மலர்களும்

போர் என்னும் வார்த்தை அதிர்வை ஏற்படுத்தாத காலத்திலோ நிலத்திலோ வாழும் நம் கவனத்தைச் சற்றும் ஈர்க்காத சில பொருட்களும் நிகழ்வுகளும் வதைமுகாம்களில் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்போருக்கு பெரும் கொடையாக எழுந்து வருவதைப் பார்க்க முடிந்தது.

சித்திரவதைக்குப் பின் வெளியே செல்லும் வலுவற்று இருக்கும் ஜூலிஸுக்கு உடன் சிறையிலிருக்கும் “அப்பா” ஒருநாள் சில புற்களையும் மலர்களையும் பறித்து வருகிறார். தலையைப் பலிகேட்கும் செயல் என்கிறார் ஜூலிஸ்.

உலகியலில் உழன்று கொண்டிருக்கும் பலர் மிதித்தழித்த அந்த புற்களும் மலர்களும் ஜூலிஸுக்கு ஏன் அத்தனை ஆனந்தம் கொடுக்கின்றன? உயிருக்கே அபாயம் என்று தெரிந்தும் அந்த புல்லும் மலரும் “அப்பாவுக்கு” ஏன் முக்கியம் என்று தோன்றியது? இழந்தால்தான் உணரமுடியுமோ?

சிறையில் உடனிருந்த “அப்பா” நீண்டநாள் நம் நினைவில் நிற்கும் நபர். ஜூலிஸின் வரிகளில்:

வெவ்வேறு வயதுடைய இரு கைதிகள் உண்மையிலேயே தந்தையும் மகனும் ஆனார்கள்.

வதைமுகாம்களில் ஒவ்வொரு நாளும் உயிர் பறிக்கும் வதைகளையும் நகரா மணித்துளிகளையும் கொண்டது என்பதைக் காண முடிகிறது. அத்தகைய சூழலில் ஒருவர் இல்லையேல் மற்றவர் இறந்திருப்பார் என்னும் அளவுக்கு இருவரும் ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கின்றனர். சிறைவாசிகளிடையே இருக்கும் இத்தகைய நெருக்கத்தின் மறுபக்கமாக காவலர்களுக்கிடையே இருக்கும் தூரமும் நட்பின்மையும் விந்தையாகத் துறுத்தி நிற்கிறது.

இந்த ஆட்சியின் காவலாளிகளிடையில் உள்ள நட்பை உமி அளவு என்பதா அல்லது அதிலும் குறைவானது என்பதா புரியவில்லை.

சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு உடனிருப்போர் துணையாக இருப்பதால் தனிமையை உணர்வதில்லை. ஆனால் வெளியே இருக்கும் காவலாளிகளே தனிமையிலும் மனஅழுத்தத்திலும் இருப்பதை ஆராய்கிறார்.

சோவியத் ஜெர்மனியை வென்றால் என்னவாகும் என்ற நிலையின்மை. நாம் கைதிகளுக்கு இழைக்கும் அநீதியெல்லாம் திரும்பி நமக்கே வருமோ என்ற அச்சம். ஒருவரை ஒருவர் வேவு பார்க்கவேண்டிய அவலம். நட்பு பாராட்டும் அளவுக்கு அவர்களுக்கு அகத்தில் நிம்மதி என்பதே இல்லை. “உசாவி அறிவது அறமல்ல. உள்ளெழுந்து நின்றிருப்பது மட்டுமே அறம்." என்ற கிருபரின் கூற்று நினைவுக்கு வருகிறது. அறம் பிறழ்ந்துவிட்டோம் என்பதை அக்காவலர்கள் உள்ளுணர்ந்தனரோ?

நாம் கவனியாமல் செல்லும் புற்களையும் மலர்களையும் போலவே, தூக்க மிகுதியில் இழந்துவிட்ட ஆயிரக்கணக்கான வாய்ப்புகளின் அருமையை ஜூலிஸின் ஒரு வரி ஆழமாகத் தொடுகிறது:

சூரியன் உதயமாவதை மீண்டும் ஒருமுறை பார்க்க எவ்வளவு ஆசையாக இருக்கிறது!

நாளை ஒரு சூரிய உதயத்தைப் பார்க்கும் சுதந்திரத்தை யாரும் தட்டிப் பறித்துவிட முடியாது என்பது போன்ற அறியாமையும், வாழ்வில் எது முக்கியம் என்பது குறித்த பார்வை உருக்குலைந்து போனதும் அல்லவா நாம் இழந்த எளிய மகிழ்ச்சிகளுக்குக் காரணம்?

உயிர்முதலீடு

சராசரிகளும், மேதைகளும், போராளிகளும் என ததும்பி வழியும் குறிப்புகளுள் கைதிகளைச் சித்திரவதை செய்ய அமர்த்தப்பட்டிருந்த செக் நாட்டைச் சேர்ந்தவர்கள் கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஆங்கிலேய ஆட்சியின்போது இந்தியர்களுக்கு எதிராகத்திரும்பிய இந்தியர்களைப் போல என்று எண்ணத் தோன்றியது.

தமக்குள் இருக்கும் வன்முறை வெறியைத் தணித்துக் கொள்வதற்காக கைதிகள்மேல் அவிழ்த்துவிடும் வன்முறையைக் காண ஒவ்வாமல் ஜெர்மன் அதிகாரிகளே பார்வையைத் திருப்பிக்கொண்டார்கள் என்ற வரிகள் நம் ஆழத்தை அசைத்துப் பார்ப்பவை.

இவர்களைக் கடந்து செல்ல ஜூலிஸ் கேடயமாகக் கொள்வதும் நம்பிக்கைதான்:

அக்கிரமங்களுக்கு எதிரான சாட்சிகள் அனைவரையும் படுகொலை செய்தபோதிலும், இறுதியில் நீதியின் வாளிலிருந்து தப்ப முடியாது என்னும் நம்பிக்கை.

‘கையில் தடியும் இரும்பும் கொண்ட கொடிய மிருகங்கள்’ என்று இவர்களைக் கடந்து சென்ற ஜூலிஸ் தன் எல்லையைக் கண்டடைவது அவருடன் கைதான ‘மிரேக் துரோகியாகி மற்றவர்களைக் காட்டிக் கொடுத்தான்’ என அறியும்போதுதான்.

சித்திரவதையைத் தாங்கிக்கொண்டு தலைநிமிர்ந்து வருபவர்கள் மத்தியில், உறுதி குலைந்து உளறிவிட்டோர் யாருடைய கண்ணையும் நேர்நோக்க முடிவதில்லை. அப்போது கூட,

இன்னொரு தோழரின் உயிரை விலையாகக் கொடுத்து தம் உயிரை வாங்கியிருக்கும் அவர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும்.

என்ற ஆதங்கத்தோடு கடந்து சென்றவர், மிரேக் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மற்றவர்களைப் பலியிட்டான் என அறியும்போது “நான் சாவை எதிர்பார்த்தேன். துரோகத்தை அல்ல” என்கிறார்.

துரோகம் என்ற வார்த்தை சற்று மிகுதியென எண்ணினாலும் அவரால் அதைத் தவிர்க்க முடியவில்லை. காரணம் இதுதான்:

சில அடி உதைகளிலிருந்து தப்பும் பொருட்டு இவனுடைய துணிச்சலும் கொள்கைப்பிடிப்பும் தூள்தூளாகச் சிதறிவிட்டன என்றால், அவை எவ்வளவு போலியாக இருந்திருக்கின்றன.

ஜூலிஸும் மிரேக்கும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். யாரையெல்லாம் காப்பாற்ற ஜூலிஸ் வதைகளைத் தாங்கிக்கொண்டாரோ, அவர்களையெல்லாம் அடகுவைத்து மிரேக் தன்னை மீட்டுக்கொண்டார்.

துடிப்புள்ள போராடும் இளைஞன் என்ற போர்வையிலிருக்கும்போது மிரேக்கைக் காதலித்த லிடா முக்கியமானவர். ‘அவளை இழந்துவிடாதீர்கள் , போதியுங்கள், வளராமல் தேங்க விடாதீர்கள், தற்பெருமை கொண்டு தலைக்கனம் கொள்ள விடாதீர்கள்…' என்று ஜூலிஸ் அவளுக்காக மன்றாடுகிறார். கிட்டத்தட்ட கம்யூனிஸ்ட்டுகளுக்கான முன்மாதிரி விழுமியங்களாகவே இவற்றைப் பார்க்கலாம்.

‘உன் கணவனைச் சுட்டுக்கொன்ற பிறகு உனக்கும் அதே கதிதான்’ என்று மிரட்டுபவனிடம் ‘நான் வேண்டுவதும் அதுதான்’ என்ற ரீதியில் துணிந்து நிற்கும் ஜூலிஸின் மனைவியும் நினைவில் நிற்பவர். இந்த இக்கட்டிலிருந்து மீண்டு இருவரும் இணைந்து வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று ஜூலிஸ் கனவுகாணும் இடம் எவரையும் இளக்கி கண்ணீர் உகுக்க வைக்கும். அப்போது ஜூலிஸ் எழுதிய வரிகள்:

நாங்கள் செத்துவிட்ட போதிலும், உங்களுடைய மகத்தான மகிழ்ச்சியில் துளிப்பங்கு கொள்கிறோம். ஏனெனில், அதில் நாங்கள் எங்கள் உயிர்களையே முதலீடாகப் போட்டிருக்கிறோம்.

“நாங்கள் செத்தாலும்” என்பது வேறு. நாங்கள் செத்துவிட்ட போதிலும் என்று உயிரோடிருக்கும் ஒருவர் எழுதுகிறார் என்பதே உளம் நடுங்கவைக்கும் தருணம். அதனை இறந்தபின் ஜூலிஸ் பேசுவதாகவே எண்ண முடிகிறது.

நகைச்சுவை

உடலும் மனமும் உச்சகட்ட அழுத்தத்தில் இருக்கும்போது நகைச்சுவை உணர்வை மிஞ்சிய உற்ற தோழன் வேறெதுவும் இருக்க முடியாது என்பதை வதைமுகாம் நிகழ்வுகள் வழியே அறியலாம்.

காவலாளிகளின் மனநிலையை வைத்தே போரின் போக்கைக் கணிக்கும் பகுதிகள் சிறப்பான அங்கதத்தை வெளிப்படுத்துவன. “உர் என்று இருந்தால் ஜெர்மனி முன்னேறுகிறது. கைதிகளிடம் சற்று உரையாட முற்பட்டால் சோவியத் ஜெயிக்கிறது” என்று ஆரம்பித்து எள்ளல் தெறிக்க இறுதியாகச் சொல்வது:

[காவலாளிகள்] நிர்பந்தத்தாலேயே கெஸ்டாபோவில் சேர்ந்ததாகச் சொல்கிறார்கள் என்றால்-ரொம்ப ஜோர். செஞ்சேனை வெகுவேகமாக ரஸ்டாவ் நோக்கி முன்னேறுகிறது என்று அர்த்தம்

புனர்ஜென்மம் எடுத்தது போன்ற உணர்வில் திளைத்திருக்கும்போது காவலாளி ‘எடுத்துக்கொள்’ என்ற ரீதியில் விட்டெரியும் பாதி சிகரெட்டைப் பார்த்து “புதிதாகப் பிறந்த குழந்தைகள் புகைப்பதில்லை” என்று மறுப்பதாகட்டும்.

ஒரு வயதான கைதி கைகள் நடுங்கியவாறு கூர் மழுங்கிய கத்தியைக் கொண்டு மழித்துவிட உதவும்போது “விசாரணையின்போது சித்திரவதையைச் சகித்துக்கொண்ட எனக்கு உன் க்ஷவரத்தையும் நிச்சயம் சகித்துக்கொள்ள முடியும்." என்று ஆறுதல் படுத்துவதாகட்டும்.

சுட்டுக் கொல்லப்படவேண்டிய ஒருவனின் பெயர் கொண்ட தபால்காரனைத் தவறுதலாகச் சுட்டுக்கொல்கின்றனர். பெரிய தவறெல்லாம் இல்லை, சரி செய்வது எளிது: “உண்மையில் யார் சாகவேண்டுமோ அவனையும் சுட்டுச் சாகடித்துவிட்டால் போதும். கணக்கு நிகராகிவிட்டது” என்பது போன்ற கசப்பான பதிவுகளாகட்டும்.

அவர் நகைச்சுவை உணர்வைக் கைவிடவேயில்லை. அல்லது நகைச்சுவை அவரைக் கைவிடவில்லை எனலாம்.

இதேபோன்ற வதைமுகாமிலிருந்த விக்டர் எழுதியது “ஒருவனிடமிருந்து எந்தச் சுதந்திரத்தை வேண்டுமானாலும் பறித்துவிடலாம், ஆனால் தனக்கு நிகழ்வனவற்றுக்கு எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை மட்டும் யாரும் பறித்துவிட முடியாது”

அத்தனை வன்பகை செறிந்த சூழலின் மத்தியில் இருந்தாலும் ஜூலிஸ் தன்னுடைய நகைச்சுவை உணர்வுடன் கூடிய அவதானிப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அதுதான் நம்மை அவ்வப்போது சோகச்சுவை கசக்கும்போதெல்லாம் எழும் குற்ற உணர்விலிருந்து விடுவித்து இப்புத்தகத்தை வாசித்து முடிக்க உதவுகிறது. நீங்கள் வருத்தப்பட வேண்டும் என நினைத்தாலும் கூட ஜூலிஸ் உங்களை விடுவதில்லை.

விதைகளும் சிலைகளும்

புத்தகம் முழுவதும் “எத்தனை பலமாக நசுக்கினாலும் வாழ்வு என்பது சிதைக்க முடியாதது” என்ற நம்பிக்கை நிறைந்து வழிகிறது. கொன்று புதைக்கப்பட்டவர்கள் அனைவரையும் விதைகளாகவே பார்க்கிறார். சித்திரவதை அனுபவங்கள் கூட விதைகளே.

கொடூரமான காலம் தன் ஆழமான சுவடுகளை எங்கள் வாழ்க்கையில் விட்டுச்செல்கிறது. மிகவும் அபூர்வமான மனித விதை, ஒருநாள் அது முளைவிட்டு வாழ்வு பெறும்.

அதனால்தான் அபூர்வ எதிர்காலத்துக்கு வித்தாகிய மனிதர்களை மறந்துவிடாதீர்கள் என்பதைப் பல இடங்களில் ஒரு மன்றாட்டாகவே வைக்கிறார்.

எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையிலேயே நாட்களைக் கழித்து எதிர்காலத்தை அழகுடையதாக்கும் முயற்சியில் உயிரைவிட்ட ஒவ்வொருவரும் கற்சிலையாகச் செதுக்கப்பட வேண்டிய பெருமை படைத்தவர்களாவர்.

யாருக்கு சிலைவைக்க வேண்டும் என்பதற்கு இதைவிட எளிய விதி இருக்கமுடியாது. இதனிடையே “புரட்சிப்பெருவெள்ளத்தை அடைக்க நினைத்தோரை மக்கிப்போகும் மரப்பாச்சிகள்” என்று நகையாடவும் தவறவில்லை.

சுத்தியும் அரிவாளும்

மே தினம் சிறையில் இருப்பவர்களுக்குக் கொண்டுவரும் விழா மனநிலை கற்பனையில் விரித்தெடுக்க வேண்டிய ஒன்று. காலை வணக்கமாகச் சுவற்றில் தட்டும் ஒலி சற்று மிகுகிறது. உணவுக்காக பிரெட் பரிமாறும் தோழர் ஒரு பிரெட் அதிகமாகக் கொடுக்கிறார். அழுத்தம் வழியே கைகள் நம்பிக்கையைப் பரிமாறிக்கொள்கின்றன.

இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் அதிகாரிகள் பார்த்திருக்கும்போது உடற்பயிற்சி என்ற பெயரில் சுத்தியல் கொண்டு அடிப்பது போலவும் அரிவாள் கொண்டு அறுவடை செய்வது போலவும் பாவனை செய்யும்போது ததும்பும் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

ஜூலிஸ் ஒரிடத்தில் கூறுகிறார்:

இரண்டு கைதிகளை நீ சேர்த்து வைத்தால், அதுவும் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்துவிட்டால் - ஐந்து நிமிடங்களில் அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கிவிடுகிறார்கள்.

வதைமுகாமுக்கு உள்ளிருந்தே அவரது எழுத்துகள் தோழர்களால் பாதுகாத்து வெளிக்கொண்டு வரப்படுவது இதற்கு உதாரணம். நூற்றைம்பது பக்கம் தேறும் புத்தகத்தை சிகரெட் அட்டைகள் வழியே எழுதிக் கடத்தியிருக்கின்றனர். கொள்கைப் பிடிப்பும் நம்பிக்கையும் கொடுக்கும் போராட்ட மனநிலைக்கு அளவே இல்லை போலும்.

வெற்றியின் கசப்பு

ஜூலிஸின் சிந்தனையில் அடிக்கடி “பெரும்புரட்சி”, “இறுதிவெற்றி” என அவர் கனவுகாணும் வருங்காலம் எதிரொலிக்கிறது. தன் நாட்டு மக்களுக்காக அவர் வரைந்து வைத்திருந்த சித்திரத்தின் ஒரு துளியை கண்முன்னால் காணும்போது அவருள் எழும் கசப்பு சிந்திக்க வேண்டியது.

விசாரணைக்காக வெளியே அழைத்துச் செல்லப்படும்போது இயல்பு வாழ்க்கையில் திளைக்கும் மக்கள் திரளைப் பார்த்த பிறகு சொல்கிறார்:

களிப்புடன் கரைபுரளும் இந்த மனித வெள்ளத்தின் நடுவே நீந்துகிறேன். இதன் முதல் இன்பச்சுவை எனக்குக் கசப்பாக இருந்தது.

அந்தக் கசப்பை அவர் மறைக்கவில்லை, மழுப்பவுமில்லை என்பது மிக முக்கியமானது. அந்தக் கசப்பை நேரே எதிர்கொள்கிறார். “இதுதானே நாம் விரும்பியது, இது ஏன் கசக்க வேண்டும்?" என்று கேள்வியெழுப்பிக் கொள்கிறார். ஒருவேளை சிலரால் போராளியாக மட்டுமே இருக்க முடியுமோ? போராட்டம் முடிந்து வென்றாலும் இயல்பு வாழ்க்கை கசந்துவிடுமோ?

இப்புத்தகம் பள்ளிக் குழந்தைகளுக்குக் கட்டாயப் பாடமாக்கப்பட்டது என்று அறிந்தபோது இதில் இருக்கும் எதிர்மறைக் கூறு ஒன்று உறுத்தியது. ஜூலிஸ் காவலாளிகளுடன் உரையாடும்போது “நீங்கள் முற்றழிக்கப்படுவீர்கள்” என்ற ரீதியிலான கருத்துக்கள் வெளிப்படுவதைப் பார்க்க முடிந்தது. ஒருவேளை எதிர்தரப்பும் ஜெர்மனியினர் அகப்பட்டால் இதே அளவு வன்முறையை ஏவியிருப்பார்களோ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கடைசிப்பருக்கை

முதல் அத்தியாயத்தில் ஜெர்மனி போலீஸ் தற்செயலாக ஜூலிஸை கைதுசெய்வதிலிருந்து வதைமுகாமில் விசாரணை முடிந்து தீர்ப்புக்காகக் காத்திருக்கத் தொடங்கும்வரையிலான நிகழ்வுகள் விரைவில் கடந்திருந்தன. குண விசேஷங்களும் துணுக்குகளும் என்ற தலைப்பில் ஜூலிஸ் எழுதியிருக்கும் பல ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள் வாசிக்கும்போது காலம் சற்று வேகம் குறைந்து மெல்ல ஒழுகிக்கொண்டிருந்தது. சட்டென ஓரிடத்தில்

அவர்கள் எல்லோரையும் பற்றிச் சித்தரிக்க நான் விரும்பினேன். ஆனால் சிலமணி அவகாசம்தான் இருக்கிறது.

என்ற வரியை வாசித்தபோது நிமிர்ந்து அமர்ந்துவிட்டேன். அந்தக் கட்டுரைகளின் உள்ளடக்கமும் வடிவமும் அவர் எழுதிக்கொண்டிருக்கும் சூழலை சற்று மறைத்துவிட்டிருந்தன. எப்போது வேண்டுமானாலும் கதவு தட்டப்படலாம், சுட்டுக் கொல்லப்படலாம். அந்த அவசரம் கட்டுரைகளிலும் தெரிகின்றது என்பதை அப்போதுதான் கவனித்தேன்.

முதலில் சில பக்கங்களுக்கு நீண்ட ஆளுமைகளைப் பற்றிய சித்தரிப்புகள் சில பத்திகளாகக் குறைகின்றன. பின்னர் ஒவ்வொருவருக்கும் சில வரிகளில் முடிக்க வேண்டிய கட்டாயம். இறுதியாக “பிலெக் - அழகிய இந்த இளங்காளை…" என்று ஒருவனுக்கு மூன்று வார்த்தைகள் மட்டுமே கிடைக்கின்றன.

உள்ளடக்கத்தின் வடிவமே எழுத்தாளரின் கடைசி மூச்சு அருகணைகிறது என்பதை மறைபிரதியாக மேலெடுத்துக் காட்டிய புத்தகம் இதுவே. இது திட்டமிட்டதோ இல்லையோ என்ற கேள்விக்கே இடமில்லை, உண்மையில் அப்படித்தானே அமையமுடியும் என்று உணர்கிறேன்.

என் வாழ்க்கையின் கடைசிப்பருக்கையை நேரம் கடித்துச் சாப்பிடுகிறது

என்று ஆரம்பித்து, மீதியிருக்கும் நேரத்தில் வரலாற்றின் துணுக்கு என்ற பெயரில் தனது மரண வாக்குமூலமாக 1941ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கைதானதிலிருந்து தூக்குமேடைத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் வரை நடந்தவற்றைச் சுருக்கமாக எழுதி முடிக்கிறார்.

எந்த ஒரு புத்தகத்திலும் இறுதி வார்த்தைகள் கிட்டத்தட்ட மொத்த புத்தகத்தின் சாரம் எனலாம். ஜூலிஸ் நாட்டு மக்களுக்கு இறுதியாக விடுத்துச் சென்ற வார்த்தைகள் உஷாராக இருங்கள்! என்பதே.

தன் வாழ்நாளின் இறுதி வார்த்தைகள் என்று அறிந்த ஒருவர் “உஷாராக இருங்கள்” என்ற வார்த்தைகளைத் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வியிலிருந்து நாம் வாசிப்புக்கு பின்னரான சிந்தனையை முன்னெடுக்கலாம்.

உஷாராக இருங்கள்!! நாம் மற்றவர்களைவிட மேலோர் என்று நினைக்கும் மனம் ஆபத்தானது. அதுதான் மாபெரும் இன அழிப்புக்கு அடித்தளம் அமைத்தது என்று கலங்கியிருப்பாரோ?

உஷாராக இருங்கள்!! நமக்கு எதிர்க்கருத்தே இருக்கக் கூடாதென செயல்படும் இயக்கம் அபாயகரமானது. அவ்வியக்கம் எதிர்க்கட்சிகளை தேசதுரோகிகள் என்று பட்டம் கட்டி வதைமுகாம்களில் அடைக்கலாம் அல்லது கொன்று குவிக்கலாம் என்று எச்சரிக்கிறாரோ?

எவ்வண்ணமாயினும், போருக்குப் பின்னரான வரலாற்றின் போக்கு இன்றைய நிலையை வந்தடைய அவரைப்போன்றோரின் உயிர்கள் முதலீடாகியுள்ளன என்பதற்கு நாம் தலைவணங்க வேண்டும்.

அது மட்டுமல்ல, தன்னிலும் கீழோர் என்று நினைத்து ஒரு இனத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து அழித்த நாட்டிலும்கூட அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என உணர்ந்த ஒருவர் காலத்தின் முன் மண்டியிட்டு நிற்கவேண்டும்.

வில்லியம் ப்ராண்ட்

[போலந்து நாட்டில் ஜெர்மனியின் ராணுவத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு நாளில் மேற்கு ஜெர்மனியின் வேந்தர் வில்லியம் ப்ராண்ட் மண்டியிட்டு அஞ்சலி செய்கிறார். பின்னர் வந்த தேசிய அளவிலான தேர்தலில் அவரது கட்சிக்கு பெரும் வெற்றி. மக்கள் தீர்ப்பு!]

இந்த நூற்றாண்டில் நம் வாழ்க்கைச் சூழலுக்கும் தரத்துக்கும் வேர்கள் முந்தைய நூற்றாண்டில் இருக்கலாம். அவற்றில் சில மிகவும் கசப்பான போர்க்காலங்களாகவும் இருக்கலாம் என்று உணரவைக்கும் புத்தகம். இதனை அறிமுகம் செய்து, வாசித்து, இதைப்பின்னொற்றி எழுதி நினைவில் இருத்த உதவிய நண்பர்களுக்கு நன்றி.

தொடர்புடைய கட்டுரைகள்: