வரலாறெனும் சுண்டெலியைத் துரத்திக்கொண்டு வீட்டினுள்ளே வந்துவிடும் அதிகார நாகம் தலைக்கு மேல் பத்தி விரித்து நிற்கும்போது அசையாமல் படுத்திருப்பதைத் தவிர என்னதான் செய்துவிடுவீர்கள்?

நட்ராஜ் மகராஜ், திரு தேவிபாரதி எழுதிய நாவல். புனைவுதான் என்றாலும் யதார்த்தம் மேலோங்கிய படைப்பு. தேவிபாரதி அவர்கள் ஒரு பள்ளியில் எழுத்தராகப் பணியாற்றியபோது அப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளர், தாம் ஓர் அரச குடும்பத்தின் வாரிசு என்று ஒரு குடும்ப மரத்தின் படத்தை வைத்து விளக்கியதைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டது இந்த நாவல்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தைத் துவக்கி வைத்த மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜா ஒரு புளியமரத்தில் தூக்கிலிடப்படுகிறார். 216 ஆண்டுகள் கழித்து அவரது நேரடி உயிருள்ள வாரிசு, அவரும் நட்ராஜ், ஒரு கிராமத்தில் உள்ள பாழடைந்த அரண்மனையின் சிதிலமடையாத இரண்டே காவல் கூண்டுகளில் ஒன்றை வீடாக்கி வாழ்ந்து வருகிறார். அவருடைய மூதாதை அந்நிலத்தை ஆண்ட மன்னர் என்பதோ, மூன்றுமுறை ஆங்கிலேயர்களை போரில் வென்றவர் என்பதோ தற்போதைய நட்ராஜுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவ்வூரில் உள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியில் இருக்கும் நட்ராஜ், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களைத் திருடி குடும்பம் நடத்த வேண்டிய அவல நிலையில் வாழ்கிறார்.

தாம் ஏன் ஒரு சிதிலமடைந்த அரண்மனையில் குடியிருக்கிறோம் என்ற சிந்தனை கூட இல்லாத ஓர் எளியவர். அரசின் தொகுப்பு வீட்டு உதவித் திட்டத்தில் நான்கு பேர் வசிப்பதற்கு 164 சதுர அடி இடமுள்ள வீட்டைக்கட்டிக்கொள்ள சுதந்திர இந்திய அமைப்பின் வாசல்களில் அயராது காத்திருக்கும் கடைநிலைக் குடிமகன்.

அவர் நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரன் மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜாவின் உயிருள்ள நேரடியான ஒரேவாரிசு எனும் நம்புவதற்கு அரிய வரலாற்று உண்மை எடுத்துரைக்கப்படுகிறது. ஆசிரியர் நூறுமுறை இந்த வாக்கியத்தைப் புத்தகம் முழுதும் பயன்படுத்தியும், ‘ந’ வெறும் சத்துணவு அமைப்பாளராகவே நமக்குப் புலப்படுவது ஏன் என்பது சுவாரசியமான கேள்வி. மேலும் இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை பல வழிகளில் நிறுவப்பட்டு பரவலான கவனத்தைப் பெறுகிறது. அதை நட்ராஜ் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை வெகு இயல்பாக நகர்த்திச் செல்கிறார் தேவிபாரதி.

நட்ராஜின் இந்த பரிதாபத்திற்குரிய நிலை சுதந்திர இந்தியாவின் மிக மோசமான தோல்வியாகக் கருதப்படுவதிலும், இந்த அநீதியைச் சரிசெய்து வரலாற்றை நிமிர்த்த வேண்டுமென்பதிலும் அதிகாரத்திலிருக்கும் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. முதலமைச்சர், ஆளுநர், காவல் துறை அதிகாரி, உடன் பணிபுரிவோர் என அனைவரும் நட்ராஜ் உடன் நிற்கின்றனர். ஆனால் இருநூறாண்டு கால வரலாற்றைச் சட்டென ஒருநாளில் திருத்தி எழுதிவிடவும் வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருக்கின்றனர்.

தன்னுடைய மாவட்டத்தில், இப்படி ஒரு மன்னர் குடும்பத்தின் வாரிசு வாழ்ந்துவரும் தகவல் அறிந்து காவல்துறை அதிகாரி நட்ராஜை சந்தித்து நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், தாம் அடைந்த குற்ற உணர்வைக் களைய வாய்ப்பாக பின்வருமாறு ஓர் உறுதிமொழி அளிக்கிறார்.

உரிய நேரத்தில், உரியவர்களால், உரியவிதத்தில் நிச்சயமாக வரலாற்றின் கணக்கு சரிசெய்யப்படும்

அத்தகைய காவல்துறை அதிகாரியாலேயே நாவலின் இறுதியில் வரலாற்றின் கணக்கு சரிசெய்யப்படுகிறது. ஆனால் யாருக்கு ஏற்றதாக சரிசெய்யப்படுகிறது என்பதே கேள்வி.

நட்ராஜை பேட்டி காண வரும் தொலைக்காட்சி மற்றும் வார இதழின் செய்தியாளர்கள் “இந்தச் சமூகம் அல்லது அரசாங்கத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்கும்போது நட்ராஜின் மனைவி முந்திக்கொண்டு வைக்கும் கோரிக்கை இதுதான்:

குடியிருக்கறதுக்கு ஒரு வீடு. அது போது எங்களுக்கு…ஆராருந்தாலு பாதியில நின்னுபோன இந்தத் தொகுப்பு வீட்டக் கட்டி முடிக்க உதவி செஞ்சாங்குன்னா மத்தத நாங்க சமாளிச்சுக்குவொ

இந்த எளிய கோரிக்கை, வரலாற்றை சரிசெய்துவிட முடியுமா? அரசின் கணக்கில் சுதந்திரத்திற்காகப் போராடி உயிர் நீத்த மன்னனின் வாரிசு நல்ல உறைவிடம் கூட இல்லாமல் வாடும் அவலத்திற்கு ஈடாகக் கொடுக்கப்பட வேண்டியது வெறும் தொகுப்பு வீடா?

இந்த எளிய மனிதர்களின் கோரிக்கையும் அரசதிகாரத்தின் இழப்பீடும் சந்திக்கும் புள்ளி எத்தகையது என்பதே நாவலின் மையச் சரடு.

மொழி

தேவிபாரதியின் எழுத்தின் வீச்சு பற்றியும் இங்க சொல்ல வேண்டும்.

ஒரு தனிமனிதன் மற்றும் அவனது குடும்பத்தின் உயிர்வாழ்தலுக்குக் கூட எவ்வகையான நெருக்கடிகள் உருவாகி வந்துள்ளன என்று அப்பட்டமாகக் காட்டும் எழுத்து. முதல் பத்து பக்கங்களின் உக்கிரத்தைத் தாங்கவே எனக்கு ஓரிரு நாட்கள் தேவைப்பட்டன. வறுமையைப் பதிவுசெய்திருக்கும் எழுத்தின் தகிப்பைத் தாங்க முடியாமல் பலமுறை வாசிப்பைப் பாதியில் நிறுத்தி ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அதன்பிறகு மொழியின் பிரவாகம் நம்மை உள்ளே இழுத்துக் கொள்கிறது.

தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சுண்டெலியைத் துரத்திக்கொண்டு உள்ளே வந்துவிடும் நாகம் ஒன்று தலைக்கு மேலே பத்தி விரித்து நிற்கும்போது, குழந்தைகள் அசைந்துவிடக் கூடாதே என்ற அச்சத்துடன் கடவுளை வேண்டிக்கொண்டு அமைதியாகப் படுத்திருப்பதே அந்த தம்பதியினரால் முடிந்தது. அந்த அளவுக்குப் புற நெருக்கடிகள். இது மிக முக்கியமான நிகழ்வு என்பது அது பலதரப்பட்ட பாத்திரங்களால் அலசப்படும் போது புரிந்துகொள்ளலாம். வாசகர்கள் இதற்குப் பல நீட்சிகளைக் கற்பனை செய்துகொள்ளவும் முடியும்.

தன் குடும்பத்தின் பசி தீர்க்கவும், ஓர் உறைவிடம் அமைத்துக்கொள்ளவும், குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவுப் பொருட்களைத் திருடி, தானும் எடுத்துக்கொண்டு தன்னைச் சுற்றியுள்ளோருக்கும் கொடுக்க வேண்டிய அற மீறல் கொடுக்கும் அக நெருக்கடிகள்.

நட்ராஜின் ஆளுமையில் நிகழும் மாற்றங்கள் வெகு இயல்பாக இருந்தாலும், எதிரெதிர் துருவங்களுக்குச் சென்று மீண்டிருப்பதை நாவல் முடிந்து தொகுத்துப் பார்க்கும்போதே உணர முடிகிறது. அவ்வாறு உறுத்தல் இல்லாமல் அகநகர்வை எழுதியிருக்கிறார் தேவிபாரதி.

இத்தகைய அகநகர்வை, நாவலின் தொடக்கத்தில் தனியார் நிறுவனத்தின் பணியை விடுத்து விரைவில் அரசு வேலையாக அறிவிக்கப்பட அனைத்து வாய்ப்புகளும் உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியில் அமரும்போது காணலாம். தொடக்கத்தில் பள்ளியின் உள்ளே அவர் கவனித்து அதிர்ச்சியடையும் அநீதிகளும், அவற்றைக் கடந்துவரும் படிநிலைகளும், பின்பு தானே அந்த அநீதிகளுக்குப் பழகி உடன்பட்டுவிடுவதும் சில பக்கங்களில் கடந்து சென்றாலும் துருத்தி நிற்பதில்லை.

பின்பு நட்ராஜ் தாம் ஒரு மகாராஜா என்று தெரியவரும்போது பள்ளியினுள் அதுவரை கண்டும் காணாமலும் விலகிச் சென்ற அநீதிகளுக்குக் காட்டும் எதிர்வினைகளும் மேற்கண்ட அகநகர்வின் நேர்க்கோட்டில் விழுவதைப் பார்க்க முடியும்.

இப்பகுதிகள் விழுமியங்களுக்கு இடையேயான தூரத்தையும் அவற்றுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் புறக்காரணிகள் எந்த அளவு நமது விழுமியங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதையும் தொகுத்துக்கொள்ள உதவுபவை.

மற்றொரு நோக்கில் புறச்சித்தரிப்புகள் எப்படி கதைமாந்தரின் அப்போதைய சூழ்நிலையுடன் ஒன்றுகின்றன என்றும் நாம் அவதானிக்கலாம்.

வாரக்கணக்கில் வியர்வைவழிய சுட்டெரிக்கும் வெயிலில் நட்ராஜ் தொகுப்பு வீட்டுக்காக ஒரு கையெழுத்து வேண்டி ஊராட்சித் தலைவரின் வீட்டின் முன்பு காத்திருக்கும் நிகழ்வுகள் நமக்கும் ஒட்டிக்கொள்கிறது. அறியாமலேயே வியர்வை வழியவும் வாய்ப்புண்டு. வருடக்கடைசியில் குளிருக்காக குறைத்து வைக்கப்பட்ட மின்விசிறியின் வேகத்தைக்கூட்டத் தூண்டும்.

எனது தாயார் இப்புத்தத்தைப் படிக்க ஆரம்பித்தவுடன் “என்னடா இது, கதையில யாருக்குமே பேரே காணும். ‘ந’ ன்னு ஒரு பேரு, ‘வ’ ன்னு ஒரு பேரு, நல்ல பேரா வச்சிருக்கலாமே” என்று என்னிடம் பகடி செய்துகொண்டிருந்தார். கவிஞர் சுகுமாரன் முன்னுரையில் எழுதியிருக்கும் பின்வரும் அவதானிப்பை அம்மாவுக்குச் சுட்டிக்காட்டினேன்:

கதாபாத்திரங்களும் இடங்களும் அவற்றின் பெயர்களின் முதல் எழுத்துக்கள் மட்டும் கொண்டு சுட்டப்படுகின்றன. இவை முதலில் வேடிக்கையாகவும் பின்னர் எச்சரிக்கைக் குறிப்பாகவும் பிறகு இயல்பானதாகவும் ஆகின்றன.

நாம் அதிக கவனம் செழுத்தாத அரசியலமைப்பின் எளிய முரண்கள் அதனினும் எளிதாக உணர்த்தப்படுகின்றன. உதாரணத்திற்கு, தொகுப்பு வீட்டிற்கான உத்தரவில் கையழுத்து வாங்கக் காத்திருக்கும் நேரத்தில் ஊராட்சித் தலைவரின் தாயாருக்கும் நட்ராஜுக்கும் நடக்கும் உரையாடல்:

“ஒரு கையெழுத்து போட்டா போதுமாக்கு?”

“ஆமாங்காத்தா, ஒரு கையெழுத்து.”

வயதான அந்தத் தாய்க்கு ஆச்சரியமாக இருக்கிறது.

“அவனொரு கையெழுத்து போட்டுக் குடுத்தான்னா கெவர்மெண்டு உனக்கு ஒரு வூடு கட்டிக் குடுத்துருமாக்கு?”

ஒரு குடிமகனின் கையெழுத்தில் மற்றொரு குடிமகனின் உறைவிடப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் அளவுக்கு நாம் முன்னேறியுள்ளோம் என்பது வயதான தாயின் கண்கள் வழியே புரிகிறது. சரியான திசையில்தான் முன்னேறியுள்ளோமா என்பது சிந்திக்கவேண்டியது.

கற்பனைக்கு இடம்

அவர்கள் வசிக்கும் காவல்கூண்டு மற்றும் பின்னால் விரிந்து கிடக்கும் அரண்மனையின் இடிபாடுகளும் தொடர்பான விவரணைகள் அழுத்தமான படிமங்களாக விரித்தெடுக்க வாய்ப்புள்ளவை. வரலாறு இடிந்து கரையான் அரித்தபடி கிடக்கிறது.

நாட்கள் செல்லச் செல்ல இந்த வரலாறு யாருக்காக புதைக்கப்பட்டது, இப்போது ஏன் தோண்டியெடுக்கப்படுகிறது என்று ஒருவகை கலங்கிய புரிதலுக்கு வருகிறார் நட்ராஜ். வரலாற்றின் கணக்கைச் சரிசெய்யும் முனைப்பில் நட்ராஜ் அரசாங்கத் திட்டப்படி ராஜ வேடம் ஏற்கிறார். ஆனால் அதனூடே நடந்தேறும் அநீதிகளுக்குப் பொருள் விளங்க அவருக்கு நேரமெடுக்கிறது.

ஆங்கிலேயர்களை எதிர்த்த காளிங்க நடராஜ மகாராஜா தூக்கிலிடப்பட்டது வரலாறாகப்பதிவாகியுள்ளதை தற்போதைய நட்ராஜ் மகராஜ் அறிவார். பல ஆண்டுகள் தனது இரு குழந்தைகளையும் மனைவியையும் தந்தையையும் வாழ்விப்பதையே மாபெரும் போராட்டமாகக் கருதிய எளிய மனிதன்தான். ஆனாலும் வரலாற்றைக்கொண்டு மறுபடியும் அரங்கேறும் அநீதிகள் அவருக்கு உவப்பதில்லை. அவற்றைப் பொறுத்துப் போக வேண்டுமென்ற சமரச எண்ணத்துக்கு இடமளிக்க அவருக்கு விருப்பமும் இல்லை.

அநீதிக்கு எதிராக வாள் ஓங்கும் நட்ராஜ் மகராஜுக்கு, வரலாற்றில் நேர்ந்த பிழையைச் சரிசெய்ய முனையும் இப்போதைய அதிகாரம் எப்படி ஈடுகட்டுகிறது என்பது இயல்பாக நடந்தேறுகிறது.

இரண்டு மகாராஜாக்களுமே மேடை ஏறுகிறார்கள். முன்னவர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது, பின்னவர் ஏறும் மேடை சுதந்திரமடைந்து நாம் எவ்வளவு தூரம் வந்துவிட்டோம் என்று காட்டுகிறது.

இந்த நட்ராஜ் மகராஜின் கதையும் ஒரு வரலாறே. இப்போதைக்கு இது புதைக்கப்படுவதும் நினைவில் நிறுத்தப்படுவதும் நமது கைகளிலேயே என்று விட்டுவிடுகிறார் ஆசிரியர் தேவிபாரதி. அந்த வரலாற்றை நாம் விரும்பும் வகையில் புனைந்துகொள்ளும் இடமும் நமக்குக் கொடுக்கப்படுகிறது.

உறங்கிக் கொண்டிருக்கும்போது வரலாறெனும் சுண்டெலியைத் துரத்திக்கொண்டு வீட்டினுள்ளே வந்துவிடும் அதிகார நாகம் தலைக்கு மேல் படமெடுத்து நிற்கும்போது அசையாமல் படுத்திருப்பதைத் தவிர என்னதான் செய்துவிடுவீர்கள்? உங்கள் கண்களுக்கு நாகங்கள் கூட சுண்டெலிகள் போலத் தோன்றினால் நீங்கள் யார்?

இத்தகைய கேள்விகளுக்கு பதிலாக உங்கள் கற்பனைக்கு இடம் கொடுக்கும் பிரதி. இந்நாட்டில் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கக் கூடிய வாழ்வனுபவம், இந்த நாவல் மூலம் உங்களுக்குக் கிடைக்கும்.

இறுதியில், இன்னும் என்னால் விடை அடையமுடியாத ஒரு கேள்வி. இந்த வரலாற்றைச் சரிசெய்ய என்ன செய்திருக்க வேண்டும்? மன்னராட்சிக்குப் பாலமாக இருக்கும் ஒருவருக்கு மக்களாட்சியில் இடமென்ன?

தொடர்புடைய கட்டுரைகள்: