ஓசோன் அடுக்கில் உருவான தேய்வுக்கு உலகம் முழுமையும் ஏன் கொதிக்கிறது?

ஊட்டி காவிய ஆய்வரங்கு முடிந்த பிறகு குரு ஃப்ரெடியின் ஆசிரமத்தில் , குரு டேவிட் மற்றும் குரு பிரிட்ஜெட் இருவரையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் வெளிநாட்டவர், 10 வருடங்களுக்கு மேலாக இங்கே இருக்கும் இந்தியப் பிரஜைகள். வாக்களித்ததற்கான கருப்பு மை தீட்டிய விரல்கள்.

அவர்களின் சிறு குடில்கள், நூலகம் மற்றும் தோட்டங்கள் வழியே அழைத்துச் சென்றனர். செறிவான தத்துவக்கூறுகள் நிறைந்த உரையாடல்.

இரண்டு மணிநேரம் கழித்து அவர்களிடம் விடைபெற்று வெளியேறியபோது யாருக்கும் அங்கிருந்து செல்ல மனமில்லை. அவ்விடத்தின் வலுவான ஈர்ப்பு விசை அனைவரையும் பற்றி இருத்தியது.

அவர்கள் பகிர்ந்துகொண்ட தத்துவங்கள் புதியவையல்ல. அறிவுரை எளிது. தத்துவமோ மிக எளிது. எனில், அவர்களிடமிருந்த ஈர்ப்பு விசை என்ன?

தான் நம்பும் தத்துவத்தையே வாழ்க்கைமுறையாகக் கொண்டவர்களின் சொல் வலிமை மிக்கது. ஐயத்திற்கு இடமில்லாமல் தன்னை நிறுவிக்கொண்டது. அதனினும் மேலாக, தனது அறத்தின்பால் உயிர்துறக்கவும் துணிபவர்களின் சொல்லோ மறுக்க முடியாதது.

ஸ்டாலின் பாலுச்சாமி எழுதிய நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு என்னும் புத்தகமும் இத்தகைய மாமனிதர்களைப் பற்றியதே.

“தண்ணீருக்காக உயிர்துறந்தவர்களின் வாழ்வுக்கதை” என்ற உப தலைப்புடன், தன்னறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தில், கங்கையைக் காக்க அற வழியில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த சாதுக்களின் கதையை விவரிக்கிறார் ஸ்டாலின்.

31 பக்கங்களே கொண்ட செறிவான மிகச்சிறிய புத்தகம். கூடவே நிகமானந்தா அளித்த பேட்டியின் தமிழ் வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது.

மாத்ரி சதன் போராட்டம்

2545 கி.மீ நீளமுள்ள கங்கை நதியில் ஒரு 100 கி.மீ பகுதியைப் பாதுகாப்பதே மாத்ரி சதன் ஆசிரமத்தில் ஆரம்பிக்கப்பட்ட அறப்போராட்டத்தின் நோக்கம்.

சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தையும் இணைத்து நடத்துகின்றனர்.

இப்போராட்டத்தினை ஆவணப்படமாகப் ஒளிப்பதிவு செய்துள்ளார் லிசா சபினா ஹார்னே.

34 வயதே ஆன நிகமானந்தா, 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது விஷ ஊசி மூலம் கொல்லப்பட்டார்.

ஐ.ஐ.டி கான்பூர் பேராசிரியர் ஜி.டி.அகர்வால் துறவுபூண்டு உண்ணா விரதமிருந்து உயிர்நீத்தார்.

அவர்களுக்குப் பின் கங்கையைக் காக்க போராட்டத்தைத் தொடர்ந்த ஆத்மபோதானந்த் 194 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மே 2019ல் அரசின் எழுத்துப்பூர்வ உறுதிப்பாட்டின் அடிப்படையில் தன் நோன்பினைத் துறந்திருக்கிறார்.

இவர்களைப் பற்றிய மேலதிகத் தகவல்களை இப்புத்தகத்தில் காணலாம்.

ஆனால், லிசா சபினாவின் ஆவணப்படத்தைப் பார்க்கும் எவருக்கும் ஒன்று உறுதியாகப் புலப்படும். ஒரு சில மாதங்களிலேயே அரசு அளித்த உறுதிகள் கங்கையோடு கரைத்துவிடப்பட்டு கனிமக்கொள்ளை மீண்டும் தலையெடுக்கும். யாரேனும் ஒரு சாது மறுபடியும் உண்ணாவிரதமிருந்து உயிர்விடத்துணிவார்.

என்னளவில் கடைசி ஆறு பக்கங்களில் நிரம்பியிருக்கும் நிகமானந்தாவின் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. கங்கைப்போர் என்ற தளத்திலிருந்து தனிமைப்படுத்தி வாசித்தாலும் ஆழ்பொருள் கொண்ட வார்த்தைகள்.

தன்னலம்

நிகமானந்தாவுடனான பேட்டியில் ஒரு கேள்வி. உலகின் சூழலையும் உயிர்களையும் பாதுகாப்பதே இந்தியப் பண்பாட்டின் அடித்தளமாக இருக்கும்போது, இத்தனை சரிவு ஏற்படக் காரணம் என்ன?

நிகமானந்தாவின் பதிலின் ஒரு பகுதி:

இது அனைத்துக்குமான ஒற்றைக்காரணம் நாம் சிறிது சுயநலமாக மாறிவிட்டோம்.

சாது அல்லவா? அதனால்தான் நமக்கு வலிக்காதவாறு சிறிது சுயநலமாக மாறிவிட்டோம் என்கிறார். சுயநலமல்லாமல் எதனையும் சிந்திக்க இயலாமல் ஆகிவிட்டோம் என்பதே உண்மை என்று நினைக்கிறேன். எந்தச் செயலிலும் அதனால் எனக்கென்ன கிட்டும் என்ற ஒரு கேள்விக்கான பதிலைப் பொருத்தே நமது பங்களிப்பு இருக்கிறது.

தேர்தல் காலங்களில் ஓட்டு போடுவதற்கே கைநீட்டி காசு வாங்குவதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்? கிராமங்களில் கூட போலீஸுக்கு பணம் கட்டி கொஞ்சம் ஆற்று மணல் அள்ளிக்கொள்ளலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையாகிவிட்டது என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

புறப்பொருள்

சுயநலம் உயிர்குலங்களுக்குத் தீங்கானதாக மாறியதற்கும் ஒரு நுண்ணிய காரணம் உண்டு.

நிகமானந்தாவின் பேட்டியில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி ‘பொருளாதாரமே செல்வாக்கு பெறும் சூழலில் வளர்ச்சி எவ்வாறு அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை உருவாக்கும்?’.

அவரது பதிலின் ஒரு பகுதி:

புறவுலகுசார்ந்த சார்ந்த மகிழ்ச்சியை வாழ்வுநோக்கமாகக் கருதியதே அனைத்து வீழ்ச்சிக்கும் முக்கிய காரணம்

தனிமனித உலகியல் ஆதாயத்திற்கான செயல்கள் என்றுமே நிறைவளிக்க முடியாது. மற்றவர்களின் மகிழ்ச்சியையும் நன்மையையும் முன்வைத்து செயலாற்றும்போதே உடல், மனம், ஆன்மா இம்மூன்றும் நிறைவடைகின்றன என்பதே நிகமானந்தாவின் முடிவு.

அளவுக்கு அதிகமான பொருளீட்டும் விழைவே துயரங்களுக்குக் காரணமோ?

பொருளாதார வலையின் ஒரு கண்ணியாக இருப்பதைத் தவிர சமூகத்திற்காக எந்த மேலதிக பங்களிப்பும் வழங்காதவர்களின் பெருக்கமே எதிர்மறை விளைவுகளுக்கும் சூழியல் அழிவுக்கும் காரணமென நினைக்கிறேன்.

புண்

டேனியல் கோல்மன் எழுதிய கவனக்குவியம் என்ற புத்தகத்தில் நம் உடல் பரிணாம வளர்ச்சியில் இயற்கையாக வந்தடைந்திருக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய நுண்ணிய அவதானிப்பைப் பதிவு செய்திருப்பார்.

கண்முன் ஒரு சிறு பூச்சி பறந்துவந்தாலோ, காலருகே ஒரு பாம்பைப் பார்த்தாலோ நம் உடல் அனிச்சை செயல்கள் மூலம் தன்னைப் பாதுகாத்துக்கொள்கிறது. அது நம் சிந்தனை இயந்திரத்தை நம்பியிருப்பதில்லை. நம் மூளையை நம்பியிருந்தால் பேரிழப்புதான் என்பதை உடல் அறிந்திருக்கிறது போலும்.

ஆனால், பாதகமான விளைவுகள் கால அலகில் வெகுவாகப் பின்தள்ளப்படும்போது அவற்றுக்கெதிராக நம்மைக் காக்கும் எந்த அனிச்சை செயலும் நமக்கு வாய்க்கவில்லை. உதாரணமாக, புகைப்பிடித்தால் புற்று நோய் வரும் என்று தெரிந்தாலும் உடனடி எதிர்மறை பாதிப்பு எதுவும் இல்லாததால் புகைப்பிடிக்கும்போது உடல் தன்னளவில் எந்தக் கட்டுப்பாட்டையும் விதிப்பதில்லை.

தனி மனித அளவிலேயே இப்படி ஓர் எல்லை இல்லாதபோது, ஒட்டு மொத்த உயிரினங்களையும் ஒருசில வருடங்கள் கழித்து பாதிப்பை விளைவிக்கும் செயல்களுக்கெதிராக நமது உள்ளுணர்வு செயல்படுவதில்லை. காடுகளை எரித்தழித்து விவசாயத்திற்கும் கட்டுமானத்திற்கும் பயன்படுத்துவதோ, ஆற்றுப்படுகையைச் சீரழிப்பதோ எந்த மனத்தடையும் இல்லாமல் செய்யப்படும் செயல்கள்.

வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், நீண்ட கால அலகில் நமது செயல்களின் விளைவுகளையும் நிபுணர்கள் ஆராய்ந்து பதிவிட்டுள்ளனர். ஆனால் அவற்றைப் புரிந்துகொள்ளும் வாய்ப்புள்ளோர்கூட அதையொட்டி நடந்துகொள்வதில்லை (பிளாஸ்டிக்கைத் தவிருங்கள் - கேள்விப்பட்டதுண்டா?). அந்த வகையில் நாம் முகத்திரண்டு புண்ணுடையோரே.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

மௌனம்

கங்கையின் மரணம் எண்ணத்தில் விரித்தெடுக்க முடியாத தீமைகளை விளைவிக்க வல்லது என்றுணர்ந்து அதற்காகப் அறவழியில் போரிட்டு உயிர்நீத்த சாதுக்கள் ஒருபுறம்.

சாதுக்களைக் கடத்தி அப்புறப்படுத்தியோ அல்லது நச்சு ஊசி கொண்டு படுகொலை செய்தோ தமது வருமானத்திற்குப் பாதகமில்லாமல் தொழிலைப் பாதுகாத்துக்கொள்ளத் துணியும் சுயநலக்காரர்கள் மறுபுறம்.

இருவருக்கும் நடுவில் நாமும், நாம் தேர்ந்தெடுத்த அரசும்.

மௌனமாக இருக்கும் மக்களும் ஊடங்களும் அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருப்பது சாதுக்களுக்கு அல்ல; கங்கையையும் கனிமத்தையும் சுரண்டுபவர்களுக்கே.

ஆம், குற்றங்களைக்கண்டு மௌனமாக இருப்பது, அவற்றை ஆதரித்து ஏற்றுக்கொள்வதே. நமது அக்கறையின்மை அத்தகைய குற்றங்களை வளர்க்கிறது. அக்கறையின்மை என்பது நம் குழந்தைகள் அருந்த நாமே சேகரிக்கும் நஞ்சு.

இத்தகைய புறக்கணிப்பைத் தாளாமல் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரை கங்கைக்காக ஓர் உயிர்ப்போர்.

கங்கை அழிவதன் விளைவுகளை ஒப்பிட நிகமானந்தா கேட்கிறார்:

ஓசோன் அடுக்கில் உருவான தேய்வுக்கு உலகம் முழுமையும் ஏன் கொதிக்கிறது?

வடக்கில் கங்கை அழிந்தால் தெற்கில் நமக்கென்ன? ஆம், பாம்பு தீண்டியது காலில்தானே, தலைக்கு என்ன அக்கறை?

தொடர்புடைய கட்டுரைகள்: