விமானத்தை விண்ணில் ஏற்றுவது முதல் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை வரை பல செயல்முறைகள் பட்டியல் இல்லாமல் நடப்பதில்லை. சிக்கலான பிரச்சினைகளுக்கு பயன்மிக்க எளிய தீர்வாக சரிபார்க்கும் பட்டியல்கள் உருவெடுத்துள்ளன.

சிக்கலான செயல்முறைகளைத் திறம்பட நடத்தி முடிக்க உதவும் பரிந்துரையாகவே இப்புத்தகம் எனது பார்வைக்கு கிடைத்தது. ஆனால் இதன் உள்ளடக்கம் கொடுக்கம் அறிதல் வேறானது. தனியொரு மனிதனால் இயக்கவும் புரிந்துகொள்ளவும் முடியாத அளவுக்குத் தொழில்நுட்பமும் கருவிகளும் சிக்கலாகிவிட்டன. சிக்கலான பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு எளிதாக அமைய முடியும் என நம்பிக்கை கொடுக்கும் பிரதி.

இதை ஆங்கிலத்தில் படித்தேன், தமிழில் கிடைப்பதாகத் தெரியவில்லை.

இது அபுனைவு புத்தகம்தான், ஆனால் வறண்ட கட்டுரைகளால் ஆனதன்று. அதற்குக் காரணம் அதுல் கவாண்டே ஒரு நல்ல கதைசொல்லி என்பதுதான். ஒரு சில அத்தியாயங்களில் வரும் குறுங்கதைகள் வாசிப்புக்கு மர்மக் கதைகள் போலச் சுவைக்கின்றன. நீரில் மூழ்கி கிட்டத்தட்ட அரைமணிநேரம் கழித்து உயிர்மீளும் சிறுமியின் கதை அத்தகையது.

இப்புத்தகத்தின் மையம் உயிர்காக்கும் சிக்கலான நெருக்கடிகள் நிறைந்த செயல்முறைகளுக்குத் தீர்வாகச் சரிபார்க்கும் பட்டியல்களை முன்னிறுத்துவதே. அந்த நோக்கில் ஆசிரியர் பலவகையான துறைகளில் இருந்து உதாரணங்களை எடுத்தாள்கிறார். இவற்றில் கட்டுமானத்துறை, விமானப் போக்குவரத்து துறை போன்றவை மட்டுமல்லாமல் பிரபலங்களின் வினோத ஒப்பந்தங்கள் கூட அடங்கும்.

சிறந்த அறுவைசிகிச்சை நிபுணர் என்பதால், பட்டியல்கள் குறித்த பல்வேறு கூறுகளையும் மனித இயல்பையும் ஒன்றாகத் தைப்பதில் வெற்றிபெற்றுள்ளார். அவர் கூற வரும் இடர்களையும் அவற்றின் தீர்வுகளையும் எளிதில் புரியும்படி வரிப்பதற்கு இவ்வியல்பு பெரிதும் உதவியுள்ளது.

உதாரணத்துக்கு, நாம் உயர்தளத்தில் சிந்திக்குமளவுக்கு நமது மூளை படிமலர்ச்சியில் வளர்ந்திருக்கிறது என்பது நற்செய்தி. ஆனால் அதே மூளைத்திறன் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய சாதாரண செயல்முறைகளின் வரிசையைப் பின்பற்றுவதில் எளிதில் தவறிழைப்பதைத் தடுக்க முடிவதில்லை. அதிலும் அறுவைசிகிச்சையைப் போல், பலர் பங்குபெறும் செயல்முறைகளில் கவனச் சிதறலுக்கு வாய்ப்புகள் அதிகம். இன்னொரு உயிரைக் காப்பாற்றும் நெருக்கடி மருத்துவருக்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்கம்போது கை கழுவாமல் கத்தரிக்கோலை எடுப்பது தவிர்க்கமுடியாமல் நடந்துவிடலாம்.

இந்தப் பின்புலத்தில், பயனுள்ள வகையில் சரிபார்க்கும் பட்டியல்களை வடிவமைக்கத் தேவையான கூறுகளைப் பார்க்கலாம்.

ஆணவம் விட்டொழிக

ஒரு சிறிய பட்டியல் என்பது மிக எளிய கருவி. அவற்றின் எளிமையே அவற்றின் பயன்பாட்டுக்கு முதல் தடையாக வந்து நின்றிருக்கிறது. ஆறு வருடம் மருத்துவம் பயின்ற பிறகு, ஒரு சிறிய தாளில் எழுதியுள்ள வரிசையை மட்டும் கடைபிடித்தால் நோய்த்தொற்றைக் குறைத்து வெற்றிகரமான அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்று சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது.

பொதுவாகவே எளிய பட்டியல்கள் அறிவுசார் தொழிலில் இருப்போர் பொதுவாக பட்டியல்களை இழிவுடன் பார்ப்பதுண்டு.

பட்டியல்கள் நாம் அறிவாளிகள் என்னும் அகங்காரத்தை அவமதிக்கின்றன

இங்க ஆசிரியர் பட்டியல்களுக்கான இடத்தைத் தெளிவாக்குகிறார். கைகழுவிவிட்டே கத்தரிக்கோலைத் தொடவேண்டும் என்ற எளிய வழிமுறையை வலியுறுத்தவே பட்டியல்கள் தேவை. எத்தகைய அறுவை சிகிச்சை, எங்குத் தொடங்க வேண்டும் போன்ற சிக்கலான பல பிரச்சினைகளுக்கே நாம் உயர்தளத்தில் நமது அறிவைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அவ்வகையில், பட்டியல்கள் நமக்கு உதவியே தவிர அவமதிப்பல்ல என்று வாதாடுகிறார்.

அளவீடும் ஒப்பீடும்

தொழில் ரீதியாக அளவீட்டின் முக்கியத்துவத்தை நான் அறிவேன். ஆனால் ஒரு மாற்றத்தை அறிமுகப் படுத்துவதற்கு முன்பு தற்போதுள்ள அளவீடுகளைச் சேகரிப்பதன் முக்கியத்துவத்தை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் ஒரு அணி, அறுவைசிகிச்சைக்குத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் என்னும் பட்டியலை அறிமுகப்படுத்தும் முன்பு, அறுவைசிகிச்சைகளின் வெற்றி விகிதத்தை அட்டவணைப்படுத்த போதுமான நேரம் எடுத்து அளவீடுகளைப் பதிவேற்றுகின்றனர்.

மாற்றத்திற்கு முன்பான அளவீட்டுக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து நேரம் ஒதுக்குவது பெரும்பாலும் நடப்பதில்லை. ஆனால் மாற்றத்திற்கு முந்தைய அளவீடு, பிந்திய அளவீடு அளவுக்கே அவசியமானது என்பதைக் காணலாம்.

பட்டியலை அறிமுகப்படுத்திய பின்பு அதே அளவு நேரமெடுத்து ஆயிரக்கணக்கான அறுவைசிகிச்சைகளையும் அவற்றின் வெற்றி விகிதங்களையும் அட்டவணைப்படுத்துகின்றனர். அதன் முடிவிலேயே நாம் அளவீடுகளின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். பட்டியல்களை யாரும் நிராகரிக்க முடியாத அளவுக்கு அதிகப்படியான அறுவை சிகிச்சைகளில் நோயாளிகளின் உயிரிழப்பு தடுக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

ஒரு மாற்றத்திற்கு முன்பு அப்போதைய நிலையை அளவிடவில்லையென்றால், மாற்றத்திற்குப் பிறகு அத்தகைய அளவீட்டிற்கு வாய்ப்பில்லாமல் போகலாம். மாற்றம் நன்மையையே விளைவித்தது என்று நிறுவ அளவீடுகள் முக்கியம்.

எளிமை

பயனுள்ள வகையில் சரிபார்க்கும் பட்டியல்களை வடிவமைக்க உதவியாக விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்து சில அறிதல்களை இணைத்துள்ளார்.

பட்டியல்களின் எளிமையும் நீளமும் மொழியும் முக்கியக் காரணிகள்.

பட்டியல்கள் மிகச் சிறிதாக இருந்தால் அவற்றின் முழுப்பயனை அடைய முடியாமல் போகலாம். பட்டியல்கள் நீண்டால், அதைப் பயன்படுத்துவோருக்கு இடைஞ்சலாக அமையலாம். அவற்றின் நீளமே அவற்றை புறக்கணிக்க ஏதுவாகலாம்.

ஒரு பட்டியலில் எத்தனை சரிபார்க்கும் அம்சங்கள் இருக்கலாம் என்றும் அவற்றில் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி குறித்தும் ஆசிரியரின் அறிவுரைகள் பல தளங்களுக்குப் பொருந்தும்.

மாற்றத்திற்கு இடம்

பட்டியல்களை வடிவமைத்த பின்னர் அவற்றை மாறுதல்களுக்கு அப்பாற்பட்டவையாகக் கருதுவது ஆபத்தானது. சரிபார்க்கும் பட்டியல்களை சோதனை செய்து மெருகேற்றுவதே அவற்றை தரம் உயர்த்தும் வழி. அவற்றின் பயன்பாட்டை மேம்படுத்தும் வண்ணம் இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு மாற்றி அமைப்பது அவசியம்.

ஒருசில சரிபார்க்கும் பட்டியல்கள் உலகளாவிய பயன்பாட்டுக்கு உட்பட வாய்ப்புள்ளது. விமானத்தை இயக்குவதற்கு முன் சரிபார்க்கவேண்டிய பட்டியல் அப்படிப்பட்ட ஒன்று. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பட்டியலும் அப்படிப்பட்ட ஒன்றே. இவற்றுள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பட்டியல் விமானியின் பட்டியலைவிட அதிக மாற்றங்கள் அடைய வாய்ப்புள்ளது.

பட்டியல்களைப் பயன்படுத்துவோருக்கு அவற்றை மாற்றியமைக்கும் சுதந்திரமும் இருக்க வேண்டியது அவசியம்.

உதாரணமாக, லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்க வேண்டிய மயக்க மருந்து தனி அறையில் கொடுக்கப்படும். மற்ற நாடுகளில் அறுவை சிகிச்சை செய்யப்படும் அறையிலேயே கொடுக்கப்படும். இந்நிலையில் அனைத்து மருத்துவமனைகளும் ஒரே பட்டியலைப் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்துவது தீங்காகவே முடியும்.

அதிகாரப் பகிர்வு

இதில் வியப்புக்குரிய ஒரு நிகழ்வாக செவிலியர்களின் கையில் அறுவை சிகிச்சைக்கான சரிபார்க்கும் பட்டியலைக் கொடுத்ததைக் காணலாம்.

படிநிலைகளைத் தீவிரமாகப் பின்பற்றும் நிறுவனங்களில் மேல்மட்டத்தில் இருப்போர் தமது கீழ் பணிபுரிவோரின் சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காது போவது எளிய நடைமுறை உண்மை.

அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் செவிலியர்களின் கூற்றுக்குச் செவிசாய்க்காமல் இருக்கலாம். ஆனால் சரிபார்க்கும் பட்டியல் வழியே செவிலியர்கள் மருத்துவர்களிடம் அத்தியாவசியப் படிகளை வலியுறுத்தும்போது அவை மறுக்கப்படுவதில்லை என்பதையும் பதிவுசெய்துள்ளார். இங்கு செவிலியர்களுக்கான அதிகாரம் பட்டியல் வழியே வந்தடைகிறது.

இனி நோயாளிகளே இத்தகைய பட்டியல்களைப் பயன்படுத்துமாறு கோரிக்கை வைக்கலாம்.

இறுதி

இப்புத்தகத்தைப் படித்த பின்பு பலர் காலையில் பல்துலக்கக்கூட பட்டியல் தயாரிக்கும் செயலில் இறங்குவது இயல்பு. தவறில்லை. எல்லாம் பயிற்சிதானே.

ஆபத்திலிருக்கும்போது விமானி பயன்படுத்தும் பட்டியலில் விமானத்தை ஓட்டவும் என்பதும் ஒரு அம்சம்.

வினோதமாக இருக்கிறது, இல்லையா? இதற்கு ஆசிரியர் அளிக்கும் விளக்கம் சுவாரசியமானது. நாம் ஒப்புக்கொள்ளக் கூடியதும் கூட.

ஒற்றைப்படையாக இது பட்டியல்களுக்குப் பதாகை பிடிக்கும் புத்தகமாகப் பார்க்காமல், சிக்கலான பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு நோக்கிச் சிந்திக்கும் பயிற்சியாக எடுத்துக்கொள்வது மேலும் பயனளிக்கும்.

நிச்சயம் வாங்கிப் படியுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்: