பஷீரின் நாவல் செழிப்பு, இளமை, காதல் போன்ற ஒளிக்கற்றைகளை உள்வாங்கி அவலம், வறுமை, ஏக்கம், துன்பம் என உருமாற்றி பிரதிபலிக்கும் பல்வேறு பட்டைகள் கொண்ட சிறிய உயிர்த்துடிப்புள்ள வைரம்.

ஒரு இலக்கிய படைப்பின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கு பலதரப்பட்ட பதில்கள் இருக்கலாம். அதன் வடிவத்தைப் பொறுத்து நோக்கமும் மாறலாம். ஆனால் வாழ்வின் ஏதேனும் ஒரு இழையை வாசகமனம் ஆமோதிக்குமளவு எழுத்தில் கொண்டுவராத படைப்புகள் வாசகர்கள் நெஞ்சில் இடம்பிடிப்பதில்லை.

இளம்பருவத்தில் முளைவிடும் காதல் என்ற கதைக்களம் எழுத்திலும் காணொளிகளிலும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டுவிட்ட ஒன்று. ஆனாலும் அந்த தருணத்தில் அது சலிப்பூட்டுவதே இல்லை. எவ்வளவு மோசமாக வடிக்கப்பட்டதாக இருந்தாலும் அதை மன்னித்து கடந்து செல்ல முடியும். எனினும் அத்தகைய கதைகளில் பலவும் சில நாட்களிலேயே நினைவிலிருந்து உதிர்ந்துவிடுவதைக் கவனிக்கலாம்.

நினைவில் நிற்கும் இலக்கியப் படைப்புகள் நம்மை சற்றேனும் அசைத்துப்பார்த்த, தனித்துவம் கொண்ட படைப்புகளாகவே இருக்கும். அத்தகைய படைப்புகளுக்கே நீண்ட ஆயுளும் அமையும். பஷீரின் பால்யகாலத்து சகி நாவலை இவ்வகையில் சேர்க்கலாம். சற்றே அசைத்துப் பார்ப்பதற்கு பதிலாக, பஷீர் என்னும் பூதம் மிகப்பெரிய பாட்டிலுக்குள் நம்மை அடைத்து, நன்கு குலுக்கியபின் திறந்துவிடுகிறது. பூதத்திற்கு பாட்டில் சிறிதுதான். வெளிவரும் நாம் எங்கெல்லாம் அடிவாங்கியிருக்கிறோம் என்பது ஒவ்வொருவருக்கும் தனியனுபவம்.

பஷீரின் வெற்றி, மஜீது மற்றும் சுகறாவை நம் அருகில் உலவவிட்டதில்தான் இருக்கிறது. அவர்களது இன்பத்தில் நாம் புன்னகைப்பதும், அவர்கள் துயரத்தில் கரைந்து கண்ணீர் மல்குவதும் மிகச்சிக்கனமான சொற்செலவில் நடந்தேறியிருக்கும் சாதனை. இது மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மு. யூசுப் அவர்களின் சாதனையும் கூட.

இன்பம் பொங்கும் பள்ளி நாட்கள், காதலின் இனிமையில் கழியும் இளமை என மெல்ல நம்மை உள்ளிழுக்கும் கதையொழுக்கு எதிர்பாராத ஒரு கணச்சுழிப்பில் நம்மை ஆழத்துக்கு இழுத்துச்சென்று மூச்சுத்திணறும்வரை அழுத்திப் பிடிக்கிறது. பத்து வருடங்களை இரு பக்கங்களில் கடந்து சென்று வாழ்க்கை தலைகீழாவதைப் பதிவுசெய்திருப்பது புத்தம்புதிய கட்டிடம் ஒன்று கணநேர வெடிப்பில் இடிந்து அழிவதைப் போன்ற ஒரு தருணம்.

பிரிந்தவர்கள் சேர்வதுதானே முறை என்று மன்றாடுகிறீர்களா? பஷீர் என்னும் குழந்தை மஜீதுவையும் சுகறாவையும் மூன்று முறை சேர்த்தும் பிரித்தும் விளையாடியிருக்கிறது. பொம்மைகளின் துன்பம் குழந்தைகளுக்குப் புரியவேண்டும் என்ற அவசியமில்லை.

இரண்டு ஆறுகள் ஒன்று சேர்ந்தால் சற்று பெரிய ஆறுதானே? ஒன்றுடன் ஒன்று கூட்டினால் சற்று பெரிய ஒன்றுதானே? பள்ளியில் மஜீதின் இந்தப் பதில் அவனுக்கு “கொஞ்சம் பெரிய ஒண்ணு” என்ற பெயரை வாங்கித்தருகிறது.

வாழ்வின் மிக இக்கட்டான நிலையில் மஜீது இருக்கும் தருணத்தில் கொஞ்சம் பெரிய ஒண்ணு நம்மை புன்னகைக்க வைத்து சற்று இளைப்பாற்றுகிறது.

“உங்களுக்கு குமாஸ்தா வேலை செய்யத்தெரியுமா?”

“தெரியாது, நான் கணக்குலே மோசம்.”

கொஞ்சம் பெரிய ஒண்ணு.

பெருந்துன்பத்தின் மத்தியில் நாம் புன்னகைக்கும்படி இழையோடும் இதுபோன்ற சிறு துணுக்குகளே நாவலில் முன்னேறிச்செல்லும் ஊக்கம் கொடுக்கின்றன.

ஆரம்பத்தில் இனிக்கும் கதையோட்டம், மஜீது வீட்டை விட்டு வெளியேறும் புள்ளியிலிருந்து கசக்க ஆரம்பிக்கிறது. ஏன் இவ்வளவு துயரம் என எண்ணும் நமக்காக மஜீது வீடு திரும்ப, அங்கு மேலும் துயரம். சுகறா திரும்பி வரும்போது சற்றேனும் இனிமை திரும்பும் என நம்பும் நமக்கு அதனினும் துயரச் சுவையே கிடைக்கிறது.

கதையின் மேற்பரப்பில், அத்தனை துயரிலும் மஜீது மட்டுமே நம்பிக்கை இழக்காமல் பெரும் விமரிசனங்களில்லாமல் கடந்து செல்கிறான் எனத் தோன்றும். ஆனால் உட்பிரதி வாழ்வில் எதையும் முன்முடிவாகச் சொல்ல முடியாது என்பதையே அழுத்திக் கூறுகிறது என்றும் நாம் வாசிக்கலாம். வாழ்வில் நாம் எதிர்பார்க்கும் ஒழுங்கு அனைத்தையும் விமரிசிக்கிறது. எள்ளி நகையாடுகிறது.

சுகறாவை நாமே படிக்க வைக்கலாம் என மஜீது கேட்கும்போது அதனை மறுத்து மஜீதின் வாப்பா கூறும் காரணங்கள் தர்க்க ரீதியாக மறுக்க முடியாதவை. பின்னாளில் மஜீது ஒரு செல்வந்தரிடம் உதவிகேட்டு நிற்கும்போது அச்செல்வந்தர் உதவி செய்ய மறுப்பதும் அதே தர்க்கமே. இதனை “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற எல்லைக்குள் அடைக்கலாம்தான். ஆனால் வாழ்வின் இயல்பான நிகழ்தகவுகளில் அதுவும் ஒன்று என்ற ரீதியில் புரிந்துகொள்வதே சரியாக இருக்கும்.

மஜீதுவும் சுகறாவும் சேர்ந்து வாழ்ந்திருந்தால் அது எளிதில் மறக்கக்கூடிய ஒரு இனிய கதையாகவே இருந்திருக்கும். பிரிந்தபின் சேர்ந்தார்கள் என்று முடித்திருந்தாலும் வழமையே. ஆனால் வாழ்க்கை அவ்வளவு எளிமையாக அமைந்துவிடுவதில்லையே. வாழ்வின் சிக்கல் பிரதி முழுதும் வேரோடி இருப்பதால்தான் இக்கதையிலிருந்து எதைப் பிரித்து வெளியே எடுத்தாலும் அதன் முழுமை குன்றிவிடுகிறது.

உணர்ச்சிப்பிரவாகத்தில் இழுத்துச்செல்லப்படும் அனுபவம் வாசகர்களுக்குத்தான். ஆசிரியரின் மொழி அவ்வாறல்ல. வாழ்வின் பெரும் திருப்பங்களை விலகி நின்றபடி உணர்ச்சிகளை களைந்துவிட்டு வெறும் தகவல்களைப் பதிவுசெய்திருக்கிறார். “பணமெல்லாம் அல்லா தருவான்” என்றவர் சில நாட்களில் நோய்வாய்ப்பட்டு இறப்பதும், அவரது இறுதிச்சடங்கும், மஜீது சுகறாவுக்கு ஆறுதல் சொல்வதும் திரை வடிவில்கூட சற்று நேரமெடுக்கலாம். புத்தகத்திலோ பத்து வரிகளுக்குள் கடந்துவிடுகின்றன.

கவிஞர் வெய்யில் அவர்களுக்கு 2019 வருடத்திற்கான ஆத்மாநாம் விருது வழங்கப்பட்டது. அந்நிகழ்வில் குளச்சல் மு யூசுப் தனது மொழிபெயர்ப்பு அனுபவம் பற்றி உரையாற்றினார். இந்நூலுக்கான மொழிநடை அவரால் இயன்ற ஒரே நடை அல்ல, அவரது கையிருப்பில் உள்ள பலவகை மொழிநடைகளில் இருந்து வெகு சிரத்தையுடன் தேர்வுசெய்யப்பட்ட நடை என அவரது உரையிலிருந்து உணர முடிந்தது. “அக்ரஹார மொழி நடை, கேரள முஸ்லிம்களுக்கு பொருந்தாது” என்று எளிய உதாரணம் கொடுத்தார் யூசுப். எங்கும் துருத்தி நிற்காத சரளமான மொழி இப்படைப்பை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து தமிழ்நிலத்தில் அடைத்துவிடாமல் கேரளச்சூழலில் நடப்பதாகவே மனதில் நிறுத்துகிறது. இந்நூலின் இயல்பு குலையாமல் தமிழுக்கு கொடுத்ததற்காக குளச்சல் மு. யூசுப் அவர்களுக்கு நன்றிகள்.

நவீன இலக்கிய வாசகர்கள் நிச்சயம் வாசிக்கவேண்டிய படைப்பு. எத்தனை சிறியதாக இருந்தாலும், இது நன்கு பட்டைதீட்டப்பட்ட மதிப்பு மிக்க வைரம்.

தொடர்புடைய கட்டுரைகள்: