நம்மைச்சுற்றி அழிக்கப்படும் தாவரங்கள், மரங்கள், காடுகள், மற்றும் அவற்றைச் சார்ந்த உயிர்களைப் பற்றிய புரிதலும் அக்கறையும் இன்றி நெடுநாள் நாம் வாழ்ந்துவிட முடியாது என்ற அழுத்தமான எச்சரிக்கை

மனித இனம் பிற விலங்குகளைக் காட்டிலும் பல வகையிலும் முன்னோடியாக இருந்தாலும், நம்முடைய படிம வளர்ச்சியில் சென்றடையாமல் தேங்கி நின்றுவிட்ட திறன்கள் சில உண்டு. உதாரணமாக, கடிக்க வரும் ஒரு நச்சுப் பாம்பு நம்முள் தூண்டும் அனிச்சை செயலை புகை பிடிக்கும்போது உணர்வதில்லை. முன்னது உடனடியாக நம்மைக் கொல்லும். படிமலர்ச்சியில் இயற்கை நம்மை அதற்கு ஆயத்தப்படுத்தியுள்ளது. புகைபிடிப்பது நீண்ட நாட்கள் எடுத்துக்கொல்லும். ஆனால் அதற்கெதிரான அனிச்சை செயலெதுவும் நம் உடலில் இல்லை.

கரியமில வாயுவை கரித்துகள்களோடு சேர்த்து நுரையீரலில் நிரப்பிக்கொள்வதில் இன்பம் காண்போம் என்பதும், மனிதப் பயன்பாட்டுக்காக காடுகளை மொத்தமாக எரித்தழிப்போம் என்பதும் இயற்கையின் கொடுங்கனவில் கூட வந்திருக்க வாய்ப்பில்லை.

நம் செயல்களின் நீண்டகால விளைவுகள் பற்றிய முடிவுக்கு வருமளவுக்கு நம் சிந்தனைத் திறன் வளரவில்லை. புவியில் உள்ள ஒட்டுமொத்தக் காடுகளையும் அழித்துவிட்டால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியலாம். ஒரே ஒரு மரத்தை மட்டும் வெட்டுவதால் என்ன ஆகிவிடும் என்ற கேள்விக்கு பதில் சொல்ல நம்மால் இயலாது. நம்மால் புரிந்து முடிவெடுக்க முடியாத அளவுக்கு எண்ணிலா சரடுகளால் வருங்காலம் ஆட்டுவிக்கப்படுகிறது. எனவே விளைவுகளை ஆய்ந்தறிந்தாலும், வெகு தொலைவில் தெரியும் ஒரு ஆபத்து நம்மில் எச்சரிக்கை ஹார்மோன்களை உசுப்பிவிடுவதில்லை.

ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுபவன் அங்கேயே ரத்தம் கக்கி சாவான் என்ற தளத்திலேயே மனித இனம் விளைவுகளை அணுக்கமாகப் புரிந்துகொள்கிறது. மரங்களை வெட்டினால் அவற்றில் வாழும் பல வகை வண்டுகள் மற்றும் பறவைகள் படிப்படியாக அழிந்து அதனால் அவற்றின் இனப்பெருக்கம் குறைந்து காடுகள் மெல்ல அருகி வெப்பம் மெல்ல மிகுந்து பனி மெல்ல உருகி கடல் மெல்லப் பெருகி நிலம் மெல்ல மூழ்கி மழை பொய்த்து பஞ்சம் மூண்டு மனித இனம் மொத்தமும் நிதானமாக சில நூற்றாண்டுகளில் அழியும் என்று நீண்டால் அது நம் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.

அவ்வகையில் இந்தப் புத்தகம் நம்மைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் அழிவுகளைத் தொகுத்து நம்மை பதட்டமடையச் செய்வதில் வெற்றிபெறுகிறது. கா.கார்த்திக் மற்றும் தமிழ்தாசன் இருவரும் எழுதி, தன்னறம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

முன் அட்டையின் உள்மடிப்பில் ஆத்மாநாம் எழுதிய பின்வரும் கவிதையுடன் தொடங்குகிறது இப்புத்தகம்.

தெரிவியுங்கள் நாங்கள் உலகின் மண்புழுக்கள் என

இந்த மண்ணைப் பொருத்தவரை நாமும் மண்புழுக்களும் ஒன்றுதான், எவ்வகையிலும் மேம்பட்டவர்கள் இல்லை என்றோ நாமும் மண்புழுக்கள் போல இந்த மண்ணை வளப்படுத்தப் பிறவி எடுத்த உயிரினம்தான் என்றோ பல வழிகளில் இக்கவிதையினைத் திறந்துகொள்ளலாம்.

இதே கருத்தை இப்புத்தகத்தின் உள்ளடக்கத்திலும் காணலாம்.

மகரந்தத் துகள்களை அப்பிக் கொண்டு வரும் தேனீக்களைப் போல, விதைகளைச் சுமந்து வரும் பறவைகள் போல அடிப்படையில் நாமும் ஒரு வனமுருவாக்கிகள், வனப்பரப்பிகள்.

நாம் எவ்வளவு தூரம் தடம்புரண்டுவிட்டோம் என்று காட்டும் வாக்கியங்கள் இவை.

இக்கருத்திற்கு வலு சேர்க்கும் இரு வரலாற்றுக் குறிப்புகள் கொடுக்கப்படுகின்றன. மொரிசியசில் ஒரு டோடோ எனும் பறவையினத்தை அழிக்கப் போய் கல்வேரிய மேசர் என்னும் ஒரு மர இனமே அருகிவிடுகிறது. மற்றொரு தீவான ஈஸ்டரில், டோரோமிரோ என்னும் மரம் முற்றிலும் அழிக்கப்பட்டதன் விளைவாக சூழியல் மண்டலம் பாதிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த மனித இனமே அருகும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

இவ்விரண்டு வரலாற்றுக் குறிப்புகளையும் பின்புலமாக வைத்து நாம் மரங்களையும் காடுகளையும் அழித்துக்கொண்டிருப்பதன் வேகத்தைப் பார்க்கும்போது அதன் விளைவுகள் நம் வாழ்நாளிலேயே காணக்கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என உணர முடிகிறது.

"பொன்வண்டை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?" என்று எழுத்தாளர்கள் எழுப்பும் கேள்வி அச்சமூட்டுவதாக இருக்கிறது. அடுத்தமுறை ஊருக்குச் செல்லும்போது தேட வெண்டும். பல வருடங்களுக்கு முன்னர் பானைக்குள் அவற்றுக்கு வீடெழுப்பி என் கையால் கொன்னை இலைகள் ஊட்டி விளையாடிய நினைவுகள் எஞ்சுகின்றன.

சமூகமும் சூழலும் சமநிலையில் இருக்க 33% காடுகள் இருக்கவேண்டும் என்ற தகவலும், தமிழகத்தில் வெறும் 18.33% நிலப்பரப்பே காடுகள் என்ற குறையும் கருத்தில் கொள்ளவேண்டியவை. தற்கால மற்றும் எதிர்கால அரசுகளிடம் காடுகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களை வலியுறுத்திப் பெறுவதும் நமது கடமை.

மரம் நடுவது பின்பு தொடரும் சிகிழ்ச்சையாக இருக்கட்டும், இருக்கும் மரங்களையும் காடுகளையும் அழியாமல் பாதுகாப்பதே காயமடைந்த இயற்கைக்கு நாம் செய்யும் முதலுதவி என உணர்த்துகின்றனர். அவ்வாறு நடப்படும் மரங்களும் நமது மண்ணின் மரங்களாக இருக்கவேண்டும் என்பதற்கு வலுவான தரவுகளையும் அடுக்குகின்றனர்.

மலர்களுக்காக, விறகாக, விலைக்காக, மணத்திற்காக, தோற்றத்திற்காக என்று மானுடத் தேவைகளின் நோக்கிலேயே நாம் மரங்கள் வளர்க்கிறோம் என்று சாடும்போது அதற்கு எதிர்வாதம் என்னிடமில்லை. இத்தகைய நோக்கில் இல்லையென்றாலும் நிழலுக்காக என்றே மரம் வளர்ப்போமே தவிர வண்டுகளுக்காகவும் பறவைகளுக்காகவும் என்று தேர்ந்து மரம் நடுவதில்லை.

இங்குதான் மண்ணின் மரங்களின் தேவை உருவெடுக்கிறது.

நமது நிலப்பரப்பில் உள்ள மரங்களும் பல்லுயிர் மண்டலமும் ஒன்றை ஒன்று சார்ந்து படிமலர்ச்சி அடைந்தவை. அப்படி இருக்கும்போது இயல்தாவரமான நாவல் மரத்தையோ இலுப்பை மரத்தையோ நடுவதே நமது நிலத்தின் பல்லுயிர் மண்டலத்திற்குப் பயனாக இருக்கும். தூங்குமூஞ்சிவாகையை நடுவது எவ்வகையிலும் ஆக்கப்பூர்வமானது அல்ல.

மண்ணின் மரங்களை நட வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இயற்கை வாதம்.

இது தவிர, நமது பண்பாட்டு நிகழ்வுகளில் தாவரங்கள் எத்தகைய முக்கியத்துவம் பெற்றுள்ளன என்றும் எழுத்தில் கொண்டுவந்தது நமது புரிதலை விரிவாக்குகிறது. ‘கந்து’ என்ற சொல்லை முன்வைத்த பத்தியும், சுப்பிரமணியபிள்ளையின் முன்மொழியாகவும் மரவழிபாடு தொடர்பான சித்திரங்கள் கிடைக்கின்றன. முற்காலத்தில் மரங்களே கடவுளாக வழிபடப்பட்டு பின்னர் மரங்கள் கடவுளின் உறைவிடமாக மருவி பிறகு கோவில்கள் மரங்களை இடப்பெயர்ச்சி செய்தது வரையிலான வரலாற்றுப் படிநிலைகள் நமது பண்பாடு திரிபடைந்துகொண்டிருப்பதையும் காட்டுகிறது.

கோவில்காடுகள் பற்றிய கட்டுரைகள் பரவலாக அறியப்படாத மற்றொரு பண்பாட்டுப் புலத்தையும் நமது நிலத்தின் செல்வத்தையும் அறிமுகப்படுத்துகின்றன. கூடவே அவற்றின் அழிவையும்.

மதுரை அருகில் உள்ள இடையபட்டி கிராமத்தில் உள்ள வெள்ளிமலைக்காடுகள் பற்றிய நிலவரம் கவலையூட்டுகிறது. 700 ஏக்கருக்கும் மேலாக இருந்த காட்டில், வெறும் 100 ஏக்கர் மட்டும் கோவிலுக்கு ஒதுக்கிவிட்டு பெரும்பகுதி நிலத்தில் ராணுவ முகாம்கள் அமைத்துள்ளது நமது அரசு. மற்றொரு மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கான திட்டங்களும் உள்ளதாக அறியமுடிகிறது.

குடியிருப்புகள் அமைத்ததாலும், வெடி மற்றும் துப்பாக்கிச் சத்தத்தாலும், காடுகள் அழிக்கப்பட்டதாலும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டு சமநிலை குலைந்திருப்பதையும் உணர முடிகிறது.

இவ்வாறு அழிவுகள் ஒருபுறம் நிகழ்ந்தேறிக்கொண்டிருக்க, ஊடே தாவரங்களுக்கும் உணர்வுகள் உள்ளன என்னும் கட்டுரை மொத்த தகவல் தொகுப்பையும் திசைதிருப்புகிறது.

அழிக்க வேண்டும் என்று மனதில் நினைப்பதைக் கூட தாவரங்கள் உணர முடியும் என்பதும், விலங்குகள் தன்னருகே வெட்டப்படும்போது தாவரங்களுக்கு அச்சம் உண்டாகிறது என்பதும் ஆய்வுகள் வழியே நிறுவப்பட்டிருக்க, அப்பின்புலத்தில், ஒரு மரத்தை வெட்டும்போது அதன் உணர்வும் அதன் அருகமைந்த மரங்களின் உணர்வும் என்னவாக இருக்கும் என்று இப்புத்தகம் கேள்வி எழுப்புகிறது.

கடந்த சில நாட்களாக, புனைவுகள் அதிகம் படித்ததாலோ என்னவோ மரங்கள் மனிதனை வேட்டையாடும் பிம்பம் என்னைத் திகைக்க வைத்தது. வெட்ட வருபவனை மரத்தின் கிளை ஓங்கி அறைந்தால் என்னவாகும்?

ஜெகதீசரின் ஆய்வு குறித்தும் மரங்களுக்கு உணர்வு உண்டு என்பது குறித்தும் பள்ளியில் படித்ததோடு சரி. விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரை அறிவியல் சோதனை முடிவுகள் நம்பகமாக இல்லை என முடித்துள்ளது. இது குறித்து மேலும் அறிந்துகொள்ள வேண்டும்.

இறுதியில் நமது நிலத்தின் மரங்களின் பட்டியலோடு, மரங்களை வெட்டுவதற்கு எதிராகக் குரல்கொடுக்கவும் நம்மை வலியுறுத்தி முடிக்கின்றனர்.

வெட்டப்படும் ஒரு மரத்திற்கு ஈடாக பத்து மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் என்னும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் எளிய பிழையீடாகவும் மீட்சியாகவும் அமைய முடியும். குறைந்தது இந்த வழிகாட்டுதலாவது பின்பற்றப்படுகிறதா என உறுதி செய்து கொள்வது நமக்கு நல்லது.

நமக்காக அல்ல இப்புவி, இப்புவிக்காகவே நாம் என்ற உணர்வு திரும்பும் வரை நாம் செல்வது அழிவுப்பாதையாகவே இருக்க முடியும்.

தன்னறம் வெளியிட்டுள்ள இந்த சிறிய புத்தகம் 75 ரூபாய்க்கு கிடைக்கிறது. பலருக்கும் இதை அறிமுகப்படுத்துவது மரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு வாய்ப்பு.

இந்த வருட (2019) சென்னை புத்தகக் கண்காட்சியில் தன்னறம் அரங்கைப் பார்த்தது நிறைவளித்தது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்கத் தக்க மிகச் சிறந்த பரிசுப் பொருட்களாக இந்த அரங்கின் புத்தகங்கள் அமையும்.

தொடர்புடைய கட்டுரைகள்: