நாஞ்சில் நாடனின் தாத்தா கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சனையில் கத்தியால் குத்தப்பட்டார். அந்த வரலாற்றை தனது நிலத்தின் சமூகக் கட்டமைப்பின்மீது நாவல் வடிவத்தில் பொருத்திப் பார்க்கிறார்.

தாத்தா கத்தியால் குத்தப்பட்ட வரலாற்றை தந்தையிடமிருந்து நாஞ்சில் நாடன் கேட்டறிகிறார். அந்த வரலாற்றை தனது நிலத்தின் சமூகக் கட்டமைப்பின்மீது நாவல் வடிவத்தில் பொருத்திப் பார்க்கும்போது தாத்தா சுப்பிரமணியபிள்ளை கந்தையாவாக உருவெடுக்கிறார்.

முதல் அத்தியாயத்திலேயே கூலிவேலை செய்யும் அறுப்படிப்பு குழுவினருக்கும் நிலவுடைமை கொண்ட பண்ணையார்களுக்கும் இடையே இருக்கும் உறவும் எல்லைகளும் தெளிவடைகின்றன. ஆண்டான்-அடிமை கதை என்று குறுகிய வகைப்படுத்தலினுள் அடைக்கலாம்தான். இருப்பினும் இந்த நாவலில் காட்டுவது பொதுவாக திரைப்படங்கள் காட்சிப்படுத்தியது போன்று நிலவுடைமையாளர்முன் துண்டை அவிழ்த்து கக்கத்தில் அழுத்தியவாறு குனிந்து வாய்பொத்தி நிற்கும் விளிம்பு நிலை அல்ல. கன்றை மருட்டி இளம்பெண்ணை அச்சுறுத்தும் நிலவுடைமையாளரின் மகனை உச்சிமயிரைப் பிடித்திழுத்து அறைவிடும் துணிவும் வாய்ப்பும் கொண்ட அறுப்படிப்புக் குழுவினர் வாழும் சமுதாயம்.

நாஞ்சில் நாடன் தன்னுடைய கட்டுரையில் கந்தையாவை “பிள்ளை” சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சுட்டும் வகையில் “கந்தையாபிள்ளை” என்றே விளிக்கிறார். மற்றொரு அத்தியாயத்தில் அங்குள்ள பள்ளியில் படிக்கும் தலித் குழந்தைகள் பற்றிய குறிப்பு வருகிறது. ஆனால் நாவலின் உள்ளடக்கத்தில் வேறெங்கும் தலித் சமூகத்தினர் இல்லை. இக்கதைக்குத் தேவையில்லை என்று ஆசிரியர் நினைத்திருக்கலாம். எனவே நாவலில் துலங்கிவரும் முரண் இருவேறு விளிம்பில் நிற்கும் சமூகத்தினரிடையே திரண்டு வருவது அல்ல. நிலவுடைமை தவிர மற்ற கூறுகளில் ஏறக்குறைய சம அந்தஸ்தில் இருக்கும் இரு குழுவினருக்கிடையேயான மோதலாகவே பார்க்க முடிகிறது.

சூழல் குறித்த விவரணைகள் நம்மை அந்தக் கிராமவாசிகளில் ஒருவராக நிறுத்தும் வல்லமை கொண்டிருக்கின்றன. விரைந்தோடும் நிகழ்வுகளுக்கு முன்னுரையாக வரும் விவரணைகள் அவசியமான வேகத்தடையாக அமைகின்றன. நிகழ்வுகளை மட்டும் அடுக்கிப்பார்த்தால் உள்ளீடற்ற கதையோட்டமாக வடிவெடுக்கும் அபாயம் இருப்பதாகத் தோன்றும் அளவுக்கு விவரணைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

எலி வளையைத் தோண்டிச் செல்லும் சிறுவர்கள் அந்த வளையை எலி அடைத்து வைத்திருப்பதைக் கண்டு கொண்டாடும் இடம் ஒரு உதாரணம். இரு வரிகளில் கடந்து செல்லும் நிகழ்வு. ஆனால் அத்தகைய இடத்தில் நின்று எலி எப்போது தப்பி ஓடிவரும் என்று நெஞ்சு துடிப்பதை தம் வாழ்வில் அனுபவித்தவர்களுக்கு இனிய நினைவாக எஞ்சும் வரிகள்.

அறுப்படிப்புக் குழுவினர் தாம் முன்னேற எடுக்கும் முயற்சிகளையும், அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறையும் ஊடும் பாவுமாக்கி நாவலை நெய்திருக்கிறார். நாவல் முழுக்க பல புதிய நாஞ்சில் நாட்டு சொற்கள் புழங்கினாலும் அவை தடையாகத் தோன்றவில்லை. அவ்வப்போது இணையத்தில் தேடிப் புரிந்துகொண்டு முன்செல்வதும் உவப்பாகவே இருந்தது.

நாவல் முழுக்க வாசனைபோல் பரவியிருக்கும் நாஞ்சில் நாடனின் நகைச்சுவை நாவலுக்கு பெரும்பலம். “நெஞ்சத்து வஞ்சங்களைப் பிளந்து காட்ட நரசிங்கத்தின் நகங்களுக்கே கூர்மை போதாதபோது…” போன்று பக்கத்துக்கு ஒன்று என நூறுக்குமேல் உதாரணம் காட்டமுடியும்.

ஒரு படைப்பு சிறுகதையா, நீள்கதையா அல்லது நாவலா என்ற கேள்விக்கு ஆசிரியர் சொல்லும் பதிலே தொடக்கப்புள்ளி. ஆசிரியர் இதனை நாவலாகவே சுட்டுகிறார். எனினும் நாவல் முடியும்போது ஆசிரியர் அளவுச்சாப்பாட்டில் பாதியை மட்டுமே மட்டுமே நமக்கு பரிமாறிய உணர்வு. வேண்டுமென்றே வளர்க்கத் தேவையில்லைதான், ஆனால் சாந்தப்பன், இசக்கியம்மாள், கந்தையாவின் குழந்தைகள் போன்ற கதாபாத்திரங்களின் பார்வை நாவலில் இல்லாதது எட்டு முழ வேஷ்டியின் சிறு துண்டு மட்டுமே நம் கைக்குக் கிடைப்பது போன்றது. வேட்டி இல்லாதபோது தன்னளவில் துண்டு பயனுள்ளதே.

முதலாளிகளும் பாட்டாளிகளும்

பண்ணையார் கங்காதரம் பிள்ளையின் இளக்காரத்துக்குப் பதிலாக கந்தையா மார்பளவு உயரமான நெற்கட்டைத் தூக்கிச் சென்று களம் சேர்க்கும் அறிமுக நிகழ்விலிருந்தே நாம் கந்தையாவை பதற்றத்துடன் பின்தொடர்கிறோம். ஓடியாவது சேர்ந்துவிடடா என்று வேண்டிக்கொள்ளும் நம் முன் நிதானமாக நின்று தலையிலிருக்கும் நெற்கட்டைக் கொண்டு முருங்கைக்கிளை ஒடிக்கும் கந்தையாவின் பிம்பம் நல்ல ஆரம்ப விசையைக் கொடுக்கிறது.

அறுப்படிப்பு குழுவினரின் உழைப்பு சுரண்டப்படுவதை சுட்டும் அத்தியாயம் அச்சமூகத்தின் பொருளியல், வேளாண்மையுடன் இணைந்து சுழல்வதைக் காட்டுகிறது. பயிர் வளரும்வரை சோம்பியிருக்கும் வேலை இல்லாத காலங்களில் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். எண்பது ரூபாய்க்குக் கீழே போகாத ஒரு கோட்டை நெல்லுக்கு ஐம்பது ரூபாய் கடனாகக் கொடுக்கிறார்கள். இப்போதைய கடன் அட்டைகள் வங்கிகளுக்கு ஈட்டித்தரும் லாபத்தைவிட அதிகம். அடுத்த அறுவடையின்போது கொடுத்துவிட வேண்டும் என்பது ஒப்பந்தம். எனில் எதிர்காலத்தையும் அடகுவைத்தாகிவிட்டது. மீட்பே இல்லை.

வருடம் முழுதும் உழைத்தும் தனது அறுப்படிப்பு குழுவினர் சில சமயம் எதிர்காலக் கூலியைக் கூட அடகு வைக்கும் நெருக்கடியைக் கண்டு சோம்பிக்கழிக்கும் நாட்களை பயனுள்ளதாகக் கழிக்க வழிசெய்கிறான். நாவலின் ஒரு மையம் கந்தையா புறம்போக்கு நிலத்தில் தன் அறுப்படிப்பு குழுவினரைக் கொண்டு சீர்செய்து உருவாக்கும் காய்கறித்தோட்டம். அந்த நிலம் வாசகர்கள் விரித்தெடுக்கும் உருவகமாக வளரும் வாய்ப்பு கொண்டது.

இந்த நாவலை வாசிக்கும்போது இணை வாசிப்பாக மற்றொரு திரியில் பொதுவுடைமைக் கட்சியின் அறிக்கையையும் வாசித்துக்கொண்டிருந்தேன். கந்தையா குழுவினர் சீர்செய்யும் நிலத்தை பொதுவுடைமைக் கொள்கையின் ஒரு சிறிய மாதிரியாக அளவிடலாம் எனத்தோன்றியது.

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் முதலாளிகளை எள்ளி நகையாடும் கூற்று ஒன்று உண்டு:

முதலாளித்துவ சமுதாயத்தின் உறுப்பினர்களில், உழைப்பவர்கள் சொத்து எதுவும் சேர்ப்பதில்லை, சொத்துகளைச் சேர்ப்பவர்கள் உழைப்பதில்லை

கந்தையா வடிவமைத்த தோட்டத்தில் அனைவரும் உழைப்பவர்களே. அனைவருக்கும் விளைச்சலில் பங்கு உண்டு. அந்நிலமும் விளைச்சலும் யாருடைய தனிச்சொத்தும் இல்லை. தோட்டம் தொடங்கும் முன் பூதலிங்கத்தின் வீட்டில் நடக்கும் கூட்டம் கிட்டத்தட்ட கட்சிக்கூட்டம்தான்.

பலரின் உழைப்பில் தழைத்து வளரும் தோட்டமும் காய்கறிகளும் வேண்டுமென்றே மாடுகளை விட்டு அழிக்கப்படும்போது அதனை முதலாளித்துவத்தின் எதிர்ப்பாக இணைநிறுத்திப்பார்க்கலாம். அந்த எதிர்ப்பின் ஊற்று எங்குள்ளது என்று தேடிச்சென்றால் விக்கிரமசிங்கம்பிள்ளை மாடுகளை தோட்டத்தினுள் அவிழ்த்துவிடும் நிகழ்வில் சென்று முட்டுவோம். நன்கு விளைந்து நிற்கும் பசுமையை அழிக்க ஒருவர் மனதில் வரும் வெறி என்ன வகை மனநிலை? தன் மகன் ஒரு பெண்ணிடம் வம்பு செய்ததை கந்தையா கண்டித்தது மட்டுமே காரணமா? வாசகர்கள்தான் இதனை அசைபோடவேண்டும்.

கந்தையாவின் மன ஓட்டத்தில் இயல்பாகத் தோன்றும் பழிவாங்கும் வாய்ப்புகள் ஆழத்தில் உறையும் வன்முறையினை திரை விலக்கிக் காண்பிக்கின்றன. ஆனால் கந்தையா அவசரகதியில் மரத்துக்கும், மாடுகளுக்கும் விஷம் வைப்பது என்று அழிவுப்பாதையில் இறங்கி நடப்பவன் அல்லன். “ஆட்சேதம் இல்லாமல், பொருட்சேதம் இல்லாமல்” விஷமிகளுக்குப் பாடம் புகட்ட நினைப்பவன். வன்முறையைவிட மாற்றுவழியைத் தேடும் முனைப்பு ஒத்திசைவைத் தருகிறது. கூடவே உழைக்காமல் வந்து சேர்ந்த நிலவுடைமை மீது தொழிலாளி வைத்திருக்கும் மதிப்பை “இவனுகெல்லாம் எட்டு ஏக்கரும் பத்து ஏக்கரும் அம்மைக்கு வயத்திலேருந்து வரச்சிலேயே கூட கொண்டா வந்தானுகோ? எவனோ எழுதிவச்சான்” என்று தொடங்கும் கூரிய விமரிசனம் மூலம் பதிவுசெய்கிறார்.

அழிக்க முடியாத அளவு வலுவான தோட்டம் வேண்டுமென்றால் என்ன செய்யலாம்? வாழையும் தென்னையும் பயிரிடலாம். அதனையும் முதலாளித்துவம் அழித்தால்?

வர்க்கப்போர்

பந்தயத்தில் வென்ற பின் பரிசைக் கொடுக்காத நிலவுடைமையாளருடன் சண்டை, வம்பு செய்யும் மேல்தட்டு இளைஞனை அறைந்து கண்டித்தது, புறம்போக்கு நிலத்தில் தோட்டம் போட்டு தன் அறுப்படிப்பு குழுவினரை கடனிலிருந்து மீட்க முனைந்தது, தட்டிக்கேட்ட பாத்தியக்காரருக்கு ரூபாயும் காய்கறியும் கொடுத்து சரிகட்டியது, தோட்டத்தை நாசப்படுத்திய விக்கிரமசிங்கம்பிள்ளையின் கள்ளத்தனத்தை ஊர்ப்பெரியவர்கள் முன் வெளிச்சம்போட்டுக்காட்டியது என்று அதிகாரத்துக்கு எதிரான கந்தையாவின் குற்றங்கள் பெருகி அழுத்தம் அதன் எல்லையை அடைகிறது.

“மொறட்டு நியாயக்காரன்” என்றாலே அதிக அளவில் எதிரிகளை ஈட்டிக்கொள்ள வாய்ப்பிருப்பவன் என்றுதானே பொருள். இருந்தாலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் பலர் கந்தையாவுக்கு உடந்தையாக இருப்பதால், கங்காதரம்பிள்ளைகூட தட்டிக்கேட்க முயலவில்லை. கந்தையா பார்த்தியக்காரருக்கு பணமும் பொருளும் கொடுத்து “சரிகட்டுவதையும்” நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். “மொறட்டு நியாயக்காரன்” தானே தவிர முற்றிலும் நியாயக்காரன் அல்லன்.

முதல் அத்தியாயத்தில் பூதலிங்கம் மற்றும் குழுவினர் கந்தையாவின் சவாலைக்கண்டு மெலிதாக மனப்புழுக்கம் அடைவதைத் தவிர உட்குழுப்பூசல்கள் குறித்த எந்த முகாந்திரமும் உள்ளடக்கத்தில் காணக்கிடைக்காதது ஒரு இழப்பே. அப்படியென்றால் கந்தையாவை அகற்றவேண்டும் என்ற கட்டாயம் யாருக்கு வந்திருக்கும்? எப்போது? நாவல் இக்கேள்விகளுக்கான பதில்களை விளக்கவில்லை. பதில்கள் வாசக ஊகத்துக்கே விடப்பட்டுள்ளன.

கந்தையா இறுதியாகக் கொடுத்த அழுத்தம் கங்காதரம்பிள்ளைக்கே எதிரானது. அவரது நேர்மையைக் கேள்விகேட்பது. ஊர்க்கூட்டத்தில் “அதிகாரத்துக்கு எதிராய் எழுந்த ஒற்றைக் குரல்”, அதுவும் புள்ளிவிவரங்களுடன். நேர்மையாளர்களால் நேரும் இழப்பை அதிகார வர்க்கம் ஓரளவுக்கே பொருத்துக்கொள்ள முடியும். ஊர்மக்கள் முன்னும் கந்தையாவிடமும் நல்ல பேர் வாங்கவேண்டும் என்பதற்காக கோவில் நிலத்தில் விளைந்ததை அவ்வாறே கணக்கில் எழுத முடியுமா என்ன? அப்படியே எழுதினாலும் விற்ற விலையை திரிக்காமல் பதிவுசெய்வதனால் கோவில் முதலடிக்கு என்ன ஆதாயம்? இத்தகைய பொருளாதார இழப்புகளை எடைபோட்டுப் பார்த்தால், கந்தையாவை துடைத்தெறிவது எளிதான மாற்றுவழி.

காற்புள்ளி

அதிகாரத்துக்கு எதிரான போரில் கந்தையாவுக்கு நேர்ந்ததைப் பாதியில் நிறுத்தி ஆசிரியர் முற்றுப்புள்ளி வைக்கிறார். கந்தையா செல்ல வாய்ப்பிருக்கும் இரு வழிகளைக் கொண்டு அதனை காற்புள்ளியாக்கித் தொடர வாசகர்களுக்கு சுதந்திரம் உண்டு. மீளமுடியா வழி ஒன்று. அதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த “மொறட்டு நியாயக்காரன்” மீண்டெழுந்து கூறுவடியிலிருந்து பொதுவுடைமை முதலடியாக வளரவேண்டும் என்பதே விருப்பக்கனவு. அவனும் கங்காதரம்பிள்ளைபோல் பண்ணையார் வர்க்கத்தின் ஓர் அங்கமாக திரிந்தெழுந்தாலும் நாவலில் அது ஏற்கத்தக்கதே. ஏனென்றால், நாஞ்சில் நாடனின் தாத்தா கத்திக்குத்திலிருந்து குணமாகி மீண்டார் என்பதே வரலாறு.

தொடர்புடைய கட்டுரைகள்: