பீகாரின் காட்டு நிலம் வழியே காலத்தில் பின்னோக்கிய பயணம். மனித இயல்புகளை அணுகியறியும் தருணங்கள். நவீன உலகில் நாம் இழந்தவற்றையும் அடைந்தவற்றையும் கேள்விக்குள்ளாக்கும் உன்னதமான இலக்கியப்படைப்பு.

அலுவலகத்தில் தொடர் வாசிப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைப்பதுண்டு. அப்படி அறிமுகமான ஒருவர் சுயமுன்னேற்ற நூல்களை வாசித்து சலித்து ஆராய்ச்சி மற்றும் சுயசரிதை வகை நூல்கள் பக்கம் திரும்பியவர். புனைவுப் படைப்புகளை ஏன் வாசிக்கவேண்டும் என்பது அவரது கேள்வி.

“ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பிப்பவர் அதை வாசித்து முடிக்கும்போது வேறொருவராக இருப்பார்” என்றொரு கூற்று உண்டு. இப்புத்தகமும் அப்படியே. சத்யசரணின் வாழ்வின் இப்பகுதி, இந்நூலை வாசிப்பவர்களுக்கு அமைந்திருக்க வாய்ப்பில்லை. வாசிப்பனுபவம் வாழ்வனுபவமாவது புனைவினூடாகவே என்பதுதான் புனைவுப் படைப்புகளின் சிறப்பு. இப்புத்தகமோ, சுயசரிதை எனவும் எண்ண இடம்கொடுப்பது.

குடும்பஸ்தனான சத்யசரண் கல்கத்தாவின் நெரிசலான ஒரு சந்தில் குடியிருந்துகொண்டு திருமணத்திற்கு முன் இளமையில் காட்டில் வேலைபார்க்க நேர்ந்த அனுபவத்தை, அங்குள்ள மக்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் இயற்கையையும் முன்னிறுத்தி எழுதியிருக்கும் நாவல். ஒரு காடு அழிய காரணமாக இருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வும் ஒரு உந்துதல்.

தங்கியிருக்கும் விடுதிக்கு உணவுக்கான கட்டணம் கூட கொடுக்க முடியாத நெருக்கடி நிலையிலிருக்கும் சத்யசரண் ராஜ மரியாதையுடன் நடத்தப்படும் எஸ்டேட் மேனேஜர் வேலைக்கு வந்து சேர்கிறார். வேலை நண்பனின் உபயம்.

சத்யசரணுக்கு இங்கு ராஜ மரியாதை. முறைமைச் சொற்களில்கூட “உங்கள் கால் தூசு படட்டும், வாருங்கள்” என்றே அழைக்கின்றனர். அங்குள்ளவர்கள் சமைத்ததை அவர் உண்டால் அவருக்கு இழுக்கு எனவும் தமக்கு பாவம் வந்துசேரும் எனவும் என்னுமளவு சமூக அடுக்கில் உயர்ந்த இடம். அங்கிருப்பவர்களின் வாழ்க்கையை சிறு நிலத்தைக் குத்தகைக்கு கொடுத்து மேம்படுத்திவிட முடியுமளவு அதிகாரம். ஆனால் அங்கு அவர் சந்திக்கும் மனிதர்களும் இயற்கையும் விலங்குகளும் அவரது அகக் கண்ணைத் திறந்து பண்பட்ட மனிதனாக வாழ்க்கையைத் தொடர வழியமைக்கின்றனர்.

சத்யசரண் விழிவழியே முற்றிலும் புதிய உலகு நம்முன் திறக்கின்றது.

தினமும் வரகரிசி மட்டுமே உண்ணும் மக்கள். அரிசிச் சோறு என்பதே அரிதினும் அரிது. ஜமீன் மேனேஜர் வந்திருப்பதால் சாப்பாடு கிடைக்கும் என எண்ணி ஒன்பது மைல் நடந்து வருபவர்கள். ஐந்தே எருமைகளுக்காக குடும்பத்தை விட்டு விலகி மேய்ச்சல் நிலம் தேடி வந்த தனியர்கள். அறுவடையின்போது மட்டும் வந்துபோகும் கூலி வேலை செய்பவர்கள்.

காடு, நிலம், ஆறு, மக்கள், அதிகாரம் மற்றும் சாதிப் படிநிலைகளின் கட்டமைப்பு என அந்த காட்டு நிலத்தில் வாழ்வை நகர்த்திச்செல்லும் விசைகள் அனைத்தும் நாவல் முழுக்க இழையோடும்படி அமைத்திருக்கிறார் சத்யசரண்.

மொழி தெரியாமல், தனிமையின் அழுத்தத்தைத் தாள முடியாமல் எந்நேரமும் விலகி ஓடத் தாயாராகக் காத்திருக்கும் சத்யசரண், பின்னர் நகரத்தின் சந்தடியையும் இரைச்சலையும் தாளமுடியாதவராக உருமாறும் சித்திரம். கூடவே லப்டுலியா காடும் உருமாறுகிறது. அங்குள்ள மக்கள் மாறுகின்றனர்.

காடெனும் காளி

இருண்ட இரவிலே காலபுருஷனது தீஒளிவீசும் வாளை ஏந்தி எந்தத் திக்கும் பரவியவளாய் நிற்கும் மாபெருங்காளியின் உருவை அந்த இயற்கையில் கண்டேன்.

காடென்றவுடன் பசுமை மட்டுமே நினைவுக்கு வரும். இந்நூலில்தான் காட்டின் அத்தனை முகங்களும் எழுந்து வருகின்றன. அருந்த நீர் கிடைக்காமல் நாக்கு தடித்து வாயை அடைத்திருக்கும் நிலையில் ஒருவனை மீட்டெடுக்கும் தருணம் காடு எவ்வளவு கருணையில்லாதது என்பதை உணரவைக்கிறது.

குடில்களிலிருந்து குழந்தைகளை தூக்கிச்செல்லும் புலி, வெண்ணிற நாயாக உருமாறி உயிர்குடிக்கும் பெண், காட்டெருமைகளை வேட்டைக்காரர்களிடமிருந்து காக்கும் டாண்ட்பரோ என்னும் தெய்வம், பேரழிவை அழைத்துவரும் காட்டெரி என காடு மர்ம முகமூடி அணிகிறது.

மனிதர்களின் நிலையாமை முன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் காடு என்ற வலுவான பகைப்புலம் சத்யசரணின் சிந்தையில் அடிக்கடி மின்னி மறைகிறது. ஆனாலும் அவ்வப்போது “மனித மனத்தில் அமைதியும் இன்பமும் விளைவிக்கும் இடத்தை ஒரு பிடி கோதுமைக்காக அழிப்பதா? என்றும், நீலவானத்தின்கீழ் வெண்மலர் பூத்திருப்பதைப் பார்க்கும் மற்றொரு தருணத்தில் “மனிதனின் கண்ணுக்குத் தட்டுப்படாத இந்த இடத்தில் யாருக்காக இந்த எழில் அலங்காரம்” என்றும் சத்யசரண் கேள்விகள் எழுப்பிக்கொள்வதைப் பார்க்கும்பொழுது, அவரும் மனித மைய நோக்கிலேயே காட்டைப் பார்த்தாரோ என எண்ணத்தூண்டுகிறது.

ஆனாலும் சத்யசரண் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, காட்டின் உண்மையான தரிசனத்தை பார்க்கக்கிட்டாதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் என்பதே. நூலில் பல பக்கங்களுக்கு அவர் அத்தரிசனத்தை நமக்கும் கடத்தவே முயல்கிறார். “இயற்கையின் மர்மம் குடிகொண்ட தன்மையை சரிவர உணர்த்தமுடியவில்லை” என தத்தளிக்கிறார். ஆனாலும் அவரது முக்கியமான அவதானிப்பு:

சமுசாரியாக இருந்து குடித்தனம் நடத்த அந்த இயற்கைத் தேவி விடமாட்டாள்

எல்லோருக்கும் இத்தரிசனம் கிடைத்தால் பின்பு கவிகளும் பைத்தியக்காரர்களும் நிறைந்து இவ்வுலகே அழியும் என்கிறார். இந்நாவலினூடே சற்றேனும் பித்தேறி அலைந்து திரும்பிய அனுபவத்தை நமக்குக் கடத்தியிருக்கிறார் ஆசிரியர்.

பெண்கள்

இந்நாவல் முழுக்க பெண்கள் பற்றி வெவ்வேறு கோணங்களிலான அவதானிப்புகள், அக்காலத்தைய பண்பாட்டுப் பதிவுகள், கூடவே ஆசிரியரின் மனப்பதிவுகள் மற்றும் கருத்துக்கள் இழையோடியிருக்கின்றன.

நக்சேதியின் இரண்டாம் மனைவி மஞ்சி காணாமல் போனபின் “கல்கத்தாவைக் காட்டுகிறேன் என்னுடன் வா என யாரேனும் அழைத்திருந்தால் மஞ்சி சென்றிருப்பாள்”, “இங்கு பெண்கள் அவ்வப்போது இப்படி போய்விடுவதுண்டு” என்ற சாதாரணமாக கடந்துசெல்லும் ஒருசில வரிகள் இந்த நூற்றாண்டில் நின்று வாசிப்பவருக்கு அதிர்ச்சியளிக்கலாம்.

மஞ்சி காணாமல்போன பிறகே அக்குடும்பத்தை ஊக்கப்படுத்தி பிணைத்து நடத்திச்சென்றது மஞ்சிதான் என உணர்கின்றனர். மகள் வயதையொத்த மஞ்சியை இரண்டாம் மனைவியாக கொண்டதற்காக அவளது கணவன் நக்சேதியை மனதுக்குள் சபிக்கிறார் சத்யசரண். மஞ்சி இருந்திருந்தால் அவளுக்கும் நிலம் குத்தகைக்கு கொடுத்து நிலைத்து வாழ வழிசெய்திருக்கலாமே என வருத்தப்படுகிறார்.

சரிகைக் குஞ்சம் தொங்கும் பல்லக்கில் குளிக்க வருமளவு வளமாக வாழ்ந்த குந்தா கணவனின் மறைவுக்குப் பின் தன் குழந்தைகைளை வளர்த்தெடுக்க இலந்தைப் பழம் திருடும் நிலை. வாழ்வில் பெரும் சரிவு. தாசியின் மகளாகப் பிறக்க நேரினும் பிறப்பு தன் வாழ்வை வடிவமைக்காமல் பார்த்துக்கொண்டவள். வறுமையிலும் தன் சுயமரியாதையை தக்கவைத்துக்கொண்டவள். பிழைத்தலுக்காக ஆணின் இச்சைக்கு இடம் கொடுத்துவிடாமல் போராடும் அவளது சித்திரம் அழுத்தமானது.

மூன்றாவதாக அழுத்தமான பாத்திரம் பழங்குடி இன இளவரசி பானுமதி. “பாரத தேசம் எந்தப்பக்கம் இருக்கிறது?" என்று கேட்கும் அளவுக்கே தேசமெனும் கற்பிதம் சென்று சேர்ந்த நிலம். ஆனாலும் நிலைக்கண்ணாடி சென்று சேர்கிறது. அவளது உடையிலும் மாற்றம் வருகிறது. இதெல்லாம் வெளியிலிருந்து சில பண்பாட்டுக்கூறுகள் பழங்குடி வாழ்க்கையை ஊடுருவும் சித்திரம். ஆனால் மிக மெல்ல இந்த மாற்றங்கள் நிகழ்வதை நாவலில் உறுத்தலில்லாமல் சொல்லியிருக்கிறார்.

அவளது தாதையும் அக்குடியின் அரசனுமான தோப்ரு மறைந்தபிறகு, தந்தையும் சகோதரனும் உயிருடன் இருந்தும் “எனக்கென்று இனி யாரும் இல்லை… என்று அழும் பானுமதியைப் பார்த்து “புருஷர்களின் ஆதரவைத் தேட முயல்வது பெண்களுக்கு இயல்புதான்” என எண்ணுவது நுண்ணிய தருணம். மனித இயல்புகளில் ஒன்றை இனம்கண்டாரா? அல்லது அப்போதைய பொதுப்புத்தி திணித்த கருத்தா என மேலும் சிந்திக்க இடம்கொடுக்கும் தருணம்.

பானுமதியை மணந்து வனவாசியாகவே வாழ்ந்தாலென்ன என்ற எண்ணமும் எழாமலில்லை. ஆனால் இன்றைய அளவீடுகளின்படி வாழ்வில் முன்னேற வேண்டுமானால் சத்யசரண் கல்கத்தா போகவேண்டியிருக்கிறது. இளவரசியாகவே இருந்தாலும் பானுமதியை இழந்தே கல்கத்தாவை அடையமுடியும்.

ஆனால் இச்சித்திரங்கள் வழியே ஒரு வகையில் பெண்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருந்தார்கள் என்பதற்கான தடயங்கள் கிடைக்கின்றன. தன் மகனும் தானும் இருக்கும் குடிலுக்கள் ஒரு பெண் வந்து செல்கிறாள் என்றும் தன் மகனைக் கண்டிக்க வேண்டியும் ஜமீன் காரியாலயத்தில் வந்து நிற்கும் தகப்பன் அங்கு நிலவிய நெறியை அறிந்துகொள்ள ஒரு நல்ல உதாரணம்.

விந்தை இயல்புகள்

இந்நாவலில் காடு விவசாயத்திற்காக உருமாறுவதை தரப்படுத்தப்பட்ட நாகரிகம் மெல்ல உள்நுழைவதுடன் இணைத்து வாசிக்க முடியும். காட்டுக்குள் நடக்கும் சந்தை இத்தகைய ஊடுருவலுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஜெர்மனி, ஜப்பான் பொருட்கள், மலிவானவையாயினும், எளிய மக்களிடம் ஏழு மடங்கு விலைக்கு விற்கப்படுகின்றன. தம் உழைப்பில் விளைந்தவற்றின் உண்மை மதிப்பு தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். வருடம் முழுதும் ஈட்டியவற்றை ஒரு நாளில் செலவிடத் தயங்காத மக்கள்.

விதைகளை போகுமிடங்களிலிருந்தெல்லாம் விதைகளைச் சேகரித்து காடுமுழுவதும் விதைக்கும் பறவை போன்றவன் யுகல் பிரசாத். யுகல் பிரசாத்தின் பித்து சத்யசரணுக்கும் ஏறிவிடுகிறது. இருவரும் ரகசியமாகவே இச்செயலைச் செய்கிறார்கள். ஜமீன் வேலையாட்களுக்கு இத்தகைய ஒரு களியாட்டம் இருப்பது தெரியக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் செய்ய வேண்டிய நிலை. தாம் விதைத்தவற்றை தாமே அழித்து விவசாய நிலமாக்க வேண்டிய அவலமும்கூட.

பறவைகளைப் போல காட்டை விதைத்து வளர்க்கும் யுகல் பிரசாத் ஒரு புறம். காட்டை வெட்டி சீர்திருத்தலாம் என்று சென்றால் வன தேவதைகள் தடுத்து காதில் வேண்டாமென உபதேசிக்கிறார்கள் என பல நேரங்களில் விவசாயத்தை விடுத்து சிந்தனையில் ஆழ்ந்துவிடும் ராஜூபாண்டே. வேலை கொடுக்கிறேன் என்றாலும் நடனம் ஆடுவதுதானே எனக்குப் பிடித்திருக்கிறது என்று விலகிச்செல்லும் தாதுரியா, வெண்ணை திருடும் கிருஷ்ணனை நடித்துக்காட்டி பிழைப்பு நடத்தும் முதியவன் என அத்தனை வகை மனிதர்கள். காடுகளின் மரம், செடி கொடிகளின் அளவுக்கே இந்நாவல் மனிதர்களையும் முன்னிறுத்துகிறது.

ஏழு தலைமுறைகளாக விட்டல் கற்றுவந்த சக்கர்பாஜி நாட்டியம் அவரோடு அழிந்திருக்கும். விட்டல் வாழ்க்கையின் விளிம்பில் இருக்கம்போது அந்த நடனத்தின் தொடர்ச்சிக்காகவே அழைக்கப்பட்டதுபோல் தாதுரியா அவரிடம் மாணவனாகச் சென்று சேர்கிறான்.

வட்டி தொழில் செய்யும் தவ்தால் சாஹூ ஒரு அற்புதமான மனிதன். காலாவதியான பத்தாயிரத்துக்கும் மேலான பத்திரங்களை கை நடுங்காமல் தீயிட்டுக் கொளுத்துபவன். “பணம் வசூல் செய்ய வந்திருக்கிறானோ” என்ற எண்ணம் கூட மனதில் வந்துவிடக்கூடாது என்றெண்ணி பணம் வாங்கிச்சென்ற சத்யசரண் இருக்கம் பக்கம் கூட வராதவன்.

விந்தையின் உச்சத்தில் இருபது வருடங்களாக ஓரிடத்தில் எருமை மேய்த்துக்கொண்டு அமைந்திருக்கும் ஜயபாலன். வேறெந்த வேலையுமில்லை. குடும்பமில்லை. கும்பலாகக் கூடிப் பேசுவதில்லை. பாட்டில்லை. வெறுமனே அமர்ந்திருக்கிறான். இப்படி இருப்பது என்னவே மாதிரி இல்லையா? என்ற கேள்விக்கே அவன் அதிர்ந்துவிடுகிறான். “இதில் கவலைப்பட என்ன இருக்கிறது, ஒன்றும் சிரமமில்லை” என்பதே அவன் எதிர்வினை.

சத்யசரணின் உள்ளமும் நுண்ணுணர்வும் கூர்மையடைய ஜயபாலன் ஒரு முக்கிய ஊக்கி. ஆரம்பத்தில் எப்போதடா காட்டிலிருந்து கல்கத்தாவின் இரைச்சலுக்குத் திரும்புவோம் என ஏங்கும் சத்யசரண் தன் அகக்கண் திறந்தது ஜயபாலனைப் பார்த்துதான் என்கிறார்.

உண்மையில் இந்நாவலை வாசிக்கும் எவர்க்கும் ஒரு கணம் ஜயபாலனின் வாழ்க்கை கிட்டாதா என்னும் ஏக்கம் வரும் சாத்தியங்கள் அதிகம். காட்டின் விரிவளவு மனித வாழ்க்கையும் மனமும் விரிந்து பல்கிப்பெருகியது என உணரவைக்கும் நாவல். நமக்குக் கிட்டாத நிகர்வாழ்வினுள் நாமும் உலவ வாய்ப்பளிக்கும் நாவல். ஜயபாலன் அருகே வெறுமனே அமர்ந்து காட்டை வேடிக்கை பார்க்கும் அனுபவம் கனவிலேனும் கிட்டினால் நாம் கொடுத்துவைத்தவர்கள். இந்நாவல் அப்படி ஒரு அனுபவத்தை உங்களுக்கும் கொடுக்கட்டும்.

தொடர்புடைய கட்டுரைகள்: